ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் இயற்கை உணவு
- காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றில் இருக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணாகி விடுகின்றன.
- அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களில் செறிவூட்டப்பட்ட சுவைகள் நிரம்பி இருப்பதுடன், உண்ணவும் மென்மையாக இருக்கிறது.
இலை, தழைகளை உண்டு வாழும் விலங்குகள் அவற்றின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட சத்துக்களையும் இலை, தழைகளில் இருந்து பெறுகின்றன. மனிதர்கள் பெரும்பாலும் காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றில் இருக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணாகி விடுகின்றன.
இதற்கு மாற்றாக, தற்போது உலகின் பல நாடுகளிலும் செடிகளின் இளந்தளிர்களை 'சாலட்' போன்ற வடிவில் உணவாக உட்கொள்ளும் கலாசாரம் பரவி வருகிறது. இதற்கென்று, குறிப்பிட்ட காய்கறிகள், தானியங்களை சிறிய தட்டுகளில் வளர்த்து அவை முளை விடும் பருவத்தில் அந்த இளம் தளிர்களை சேகரித்து உணவாக எடுத்துக்கொள்கின்றனர். இதனை 'மைக்ரோ கிரீன்' என்று அழைக்கின்றனர்.
இது ஏறக்குறைய கோவில் விழாக்களில் சுமந்து செல்லப்படும் முளைப்பாரி வகை தாவர வளர்ப்பு முறை என்று சொல்லலாம். இந்த மைக்ரோ கிரீன் முறையில் வளர்க்கப்படும் தாவரங்கள் வீடுகளில் வளர்க்கப்படும்போது அவற்றுக்கு எந்த விதமான பூச்சி மருந்துகளும் பயன்படுத்துவது இல்லை. அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களில் செறிவூட்டப்பட்ட சுவைகள் நிரம்பி இருப்பதுடன், உண்ணவும் மென்மையாக இருக்கிறது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவை மனித உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது என்று இயற்கை உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இதய நோய், வகை-2 நீரிழிவு நோய், சில புற்றுநோய்கள் மற்றும் உடல் பருமன் போன்றவை வரும் அபாயத்தை மைக்ரோ கிரீன் வகை உணவுகள் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.