சமையல்

சமையலில் நம்பவைக்கும் பல்வேறு கட்டுக்கதைகள்!

Published On 2024-12-22 04:37 GMT   |   Update On 2024-12-22 04:37 GMT
  • தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
  • கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

சமையல் பணியை விரைவாகவும், ருசியாகவும் செய்து முடிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேவேளையில் ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி அதையே வாடிக்கையாக பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

அவை சமைக்கும் நேரத்தையும், சமைக்கும் பொருட்களையும் விரயமாக்கும் என்பதை அறியாமல் அந்த கட்டுக்கதைகள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அப்படிப்பட்ட கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.


கட்டுக்கதை:

மைக்ரோ ஓவனில் சமைப்பது உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகள் இழப்புக்கு வழிவகுக்கும்.

உண்மை:

சமைக்கும் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகளை மைக்ரோ ஓவன் அழித்துவிடும் என்பது பொதுவான கட்டுக்கதையாகும். உண்மையில் மைக்ரோ ஓவன் நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான சி, ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை அதன் தன்மை மாறாமல் தக்கவைத்துக்கொள்ள உதவும். அத்துடன் விரைவாக சமைப்பதற்கு உதவிடும். ஊட்டச்சத்துகள் இழப்பையும் குறைக்கும்.


கட்டுக்கதை:

சமைக்கும்போது எப்போது வேண்டுமானாலும் மசாலாப்பொருட்களை சேர்க்கலாம்.

உண்மை:

இந்த கட்டுக்கதையும் ஏற்புடையதல்ல. அதற்கு மாறாக சமைக்கத் தொடங்கும்போதே மசாலா பொருட்களை சேர்ப்பது சுவையை கூட்டி, சிறந்த பலனை தரும் என்பது சமையல் நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

அதாவது உப்பு, மஞ்சள், சமையல் பொடி வகைகள் உள்ளிட்ட மசாலா பொருட்களை ஆரம்பத்திலேயே சேர்க்கும்போது அவை சமைக்கும் பொருட்களில் ஆழமாக ஊடுருவும். அதனால் சுவையும், ருசியும் அதிகரிக்கும்.


கட்டுக்கதை:

கியாஸ் அடுப்பில் நெருப்பின் அளவை அதிகரிப்பது வேகமாக சமைத்து முடிப்பதற்கு உதவும்.

உண்மை:

அடுப்பில் இருந்து நெருப்பு அதிகம் வெளிப்படுவது சீரற்ற சமையலுக்குத்தான் வித்திடும். சமைக்கும் பொருள் தீயில் கருகக்கூடும். பாத்திரமும் கடினமாக மாறக்கூடும்.

மிதமான தீயில் சமைப்பது உணவுப்பொருட்களை சமமாக வேகவைக்க உதவும். அவை மென்மையாகவும் இருக்கும். பாத்திரங்களில் ஒட்டுவதும் தவிர்க்கப்படும்.


கட்டுக்கதை:

வேக வைக்கும் பொருட்களை ஒருமுறை புரட்டிப்போட்டாலே போதுமானது.

உண்மை:

இறைச்சி உள்ளிட்ட உணவுப்பொருட்களை அடிக்கடி திருப்பி போடுவது இருபுறமும் சமமாக வேகுவதற்கு உதவும். அவை ஒரே பக்கத்தில் வெந்து கொண்டிருந்தால் அந்த பகுதி கருகிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அடிக்கடி திருப்பி போடுவதுதான் சரியானது. குறிப்பாக ஒவ்வொரு 30 விநாடிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் திருப்பி போடுவது இறைச்சி மென்மையான பதத்தில் வேகுவதற்கும், சுவையாக இருப்பதற்கும் உதவிடும்.


கட்டுக்கதை:

தண்ணீரில் உப்பு சேர்ப்பது வேகமாக நீர் கொதிப்பதற்கு உதவிடும்.

உண்மை:

சமைக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்துவதற்கு முன்பு உப்பு சேர்ப்பது விரைவாக நீர் கொதிப்பதற்கு உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இதுவும் ஒரு கட்டுக்கதைதான்.

உண்மையில் நீர் கொதிக்கும்போது உப்பு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். உண்மையில் உப்பு நீரின் கொதிநிலை நன்னீரை விட சற்று அதிகமாக இருக்கும். ஆனால் சமையல் விஷயத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஏதும் இருக்காது. அதனால் தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

Tags:    

Similar News