அழகுக் குறிப்புகள்

கொரியன் பெண்களின் அழகின் ரகசியம்

Published On 2023-09-04 05:46 GMT   |   Update On 2023-09-04 05:46 GMT
  • கொரிய பெண்களின் வயதை சட்டென்று கணித்து கூறிவிட முடியாது.
  • முதுமை பருவ பெண்களின் முகமும் ஒருசேரவே காட்சி அளிக்கும்.

கொரிய பெண்களின் வயதை சட்டென்று கணித்து கூறிவிட முடியாது. இளம் வயது பெண்களின் தோற்றமும், முதுமை பருவத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களின் முகமும் ஒருசேரவே காட்சி அளிக்கும். அந்த அளவுக்கு அவர்களின் முகத்தோற்றம் பிரகாசத்தில் ஜொலிக்கும். முகப்பருக்கள், சுருக்கங்கள் எதுவும் தெரியாத அளவிற்கு நேர்த்தியாக சருமத்தை பராமரிப்பார்கள். செயற்கை அழகுசாதன பொருட்களை நாடாமல் இயற்கை பொருட்களை நாடுவதுதான் அவர்களது அழகின் ரகசியத்திற்கு காரணம்.

பொதுவாகவே வயது அதிகரிக்கும்போது சரும சுருக்க பிரச்சினை எட்டிப்பார்க்கும். சருமத்திற்கு போதிய கவனம் செலுத்தாதது, ரசாயனங்கள் அதிகம் கலந்த கிரீம்களை பயன்படுத்துவது, போதிய நீர்ச்சத்து, ஊட்டச்சத்து இல்லாதது போன்ற காரணங்களால் இளம் பருவத்திலேயே பலருக்கும் சரும சுருக்கம் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும்.

கொரிய பெண்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை. அதற்கு முறையான சரும பராமரிப்பும், இயற்கை அழகு சாதன பொருட்களும்தான் காரணம். சருமத்திற்கு அவர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் என்ன தெரியுமா? முட்டையும், காபி தூளும், தக்காளியும்தான். ஆம்! அவற்றை கொண்டே தங்கள் சருமத்தை பொலிவாக்குகிறார்கள்.

நன்மைகள்:

இந்த ஃபேஸ் மாஸ்கை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும். சரும சுருக்கத்தையும், ஆரம்ப நிலையில் சருமத்தில் தென்படும் நுண்ணிய கோடுகளையும் குறைக்கும். சருமத்தை இளமை பொலிவுடன் தக்கவைக்க துணைபுரியும். சருமத்தில் ஆரம்ப நிலையில் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்யும் தன்மை முட்டையின் வெள்ளைக்கருவுக்கு உண்டு. அது சரும துளைக்குள் ஆழமாக சென்று அதில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தை சுத்தம் செய்துவிடும். அந்த ஃபேஸ் மாஸ்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

முட்டை -1 (வெள்ளைக்கரு மட்டும்)

காபி தூள் - 1 டீஸ்பூன்

தக்காளி ஜூஸ் - 2 டீஸ்பூன்

செய்முறை:

* முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வருவது போல் நன்றாக அடித்து கலக்கிக்கொள்ளுங்கள்.

* அதனுடன் தக்காளி ஜூஸ் மற்றும் காபி தூளை சேர்த்து கிளறுங்கள். முகத்தில் தடவும் பதத்துக்கு தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

* முகம் துடைக்க பயன்படுத்தும் டவலை வெந்நீரில் முக்கி அதனை நன்றாக பிழிந்து கொள்ளுங்கள்.

* அந்த டவல் முகத்தில் ஒற்றி எடுக்கும் அளவுக்கு வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அந்த பதத்தில் முகத்தின் அனைத்து பகுதிகளிலும் அழுத்தி எடுங்கள்.

* பின்பு முட்டை, காபி தூள் பேஸ்டை முகம் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும்.

* 20 நிமிடங்கள் கழித்த பிறகு நன்கு உலர்ந்திருக்கும். அதனை எடுத்தால் அப்படியே பிரிந்து வந்துவிடும். அதனை மெதுவாக பிரித்தெடுத்துவிட்டு சாதாரண நீரில் முகத்தை கழுவினால் போதுமானது.

* வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம். அதன் மூலம் சருமத்தில் படர்ந்திருக்கும் அழுக்குகள், மாசுக்களை எளிதாக அப்புறப்படுத்திவிடலாம்.

Tags:    

Similar News