சருமத்தை தோற்றப் பொலிவுடன் வைக்க உதவும் மேக்கப்
- மேக்கப்பை விரும்பாத பெண்கள் இருக்கமாட்டார்கள்.
- வறண்ட சருமத்தில் மேக்கப் செய்வது தவறான பழக்கமாகும்.
மேக்கப்பை விரும்பாத பெண்கள் இருக்கமாட்டார்கள். சருமத்தை பொலிவாக்குவதற்காக விதவிதமான அழகு சாதனப்பொருட்களை கையாளுவார்கள். அவற்றை முறையாக உபயோகிக்க வேண்டும். தவறாக பயன்படுத்தி மேக்கப் செய்தாலோ, சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்க வழக்கங்களை தொடர்ந்தாலோ வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்தலாம்.
சருமம் சோர்வாகவும், மந்தமாகவும் மாறலாம். சருமத்தை விரைவாக வயதானதாக மாற்றும் ஒப்பனை தவறுகள் பற்றியும், அவற்றை தவிர்ப்பது எப்படி என்பது பற்றியும் பார்ப்போம்.
சன்ஸ்கிரீனை தவிர்க்காதீர்கள்
முன்கூட்டியே முதுமை எட்டிப்பார்ப்பதற்கு சூரிய ஒளியே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இளமை பருவத்தை கடப்பதற்கு முன்பே சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது முக்கியமல்ல. அது எஸ்.பி.எப் 30 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சன்ஸ்கிரீனை பயன்படுத்தினாலும் கூட அது சருமத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்காது. அத்துடன் எஸ்.பி.எப் 30-க்கு அதிகமான சன்ஸ்கிரீனை மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தினமும் பயன்படுத்தும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
வறண்ட சருமம்
ஈரப்பதமில்லாத, வறண்ட சருமத்தில் மேக்கப் செய்வது தவறான பழக்கமாகும். அது வயதை அதிகரிக்கச் செய்துவிடும். அந்த ஒப்பனை நீரேற்றம் இல்லாத பகுதிகளில் படர்வதால் கோடுகள், சுருக்கங்கள் அதிகமாக தெரியும்.
அதனை தவிர்க்க மேக்கப் செய்வதற்கு முன்பு சருமத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும், அதில் ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டும். அதற்கேற்ற அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தினால், சருமத்தில் மென்மைத்தன்மையை உண்டாக்கும். மேக்கப் உலர்ந்த பகுதிகளில் ஒட்டிக்கொள்வது தவிர்க்கப்படும்.
பவுண்டேஷன் பயன்பாடு
சருமத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்கு பலரும் பவுண்டேஷன் பயன்படுத்துவார்கள். அதனை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அடர் பவுண்டேஷன்களை பயன்படுத்துவது சிலருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
காலப்போக்கில் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றலாம். தடிமனான அடுக்கு கொண்ட பவுண்டேஷன்கள் சருமத்துளைகளை அடைத்து, உலர்வடைய செய்துவிடும். சரும எரிச்சலுக்கும் வழிவகுக்கும். அதனால் நீரேற்றத்தன்மை கொண்ட மென்மைத்தன்மையுள்ள பவுண்டேஷனை தேர்வு செய்ய வேண்டும். அவை சருமத்திற்கு அழகுடன் பாதுகாப்பையும் அளிக்கும்.
கண் பகுதியை புறக்கணித்தல்
கண்களை சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. அதனை முறையாக பராமரிக்காவிட்டால் விரைவில் முதுமை தோற்றம் எட்டிப்பார்க்க காரணமாகிவிடும். ஒப்பனை செய்யும்போது பலரும் கண் பகுதியை கவனிப்பதில்லை.
கனமான கன்சீலர்கள் மற்றும் கண்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தும்போது கண் பகுதியில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றக்கூடும். கண்களின் அடிப்பகுதியில் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண் கிரீம்கள் மற்றும் கன்சீலர்களைப் பயன்படுத்துவது நல்லது.
ஒப்பனையை அப்புறப்படுத்துதல்
எவ்வளவு சோர்வாக வீடு திரும்பினாலும் தூங்குவதற்கு முன்பு மேக்கப்பை அப்புறப்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் மேக்கப் சருமத் துளைகளை அடைத்து, சருமத்தில் காற்றும், ஈரப்பதமும் படர்வதை தடுத்துவிடும். விரைவாக வயதான தோற்றத்திற்கும் வழிவகுத்துவிடும்.
மேக்கப்பை அகற்றுவதை புறக்கணிப்பது காலப்போக்கில் சருமத்திற்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும். அதை தவிர்க்க தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அது சருமம் புதுப்பித்தல் செயல்முறையை தொடங்குவதற்கு வித்திடும்.
காலாவதி பொருட்களை பயன்படுத்துதல்
காலாவதியான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவது சருமத்தில் எரிச்சல், வீக்கத்தை ஏற்படுத்தும். தோல் பிரச்சனைகளை உண்டாக்கி விரைவாகவே வயதான தோற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.
அழகு சாதனப்பொருட்களின் காலாவதி தேதிகளைத் தவறாமல் சரிபார்ப்பதோடு, அழகு சாதன நிபுணர்கள் பரிந்துரைக்கும் பொருட்களை பயன்படுத்துவது நல்லது.