ஹார்மோன் சமநிலையின்மையால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
- எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம்.
- ஹார்மோன் குறைபாடு, பரம்பரை நோயல்ல.
பெண்களுக்கு எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையின் அறிகுறிகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
* பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பத்து வயது முதல் எந்த வயதிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவருக்கு இந்த சமநிலையின்மை காரணமாக, மனச்சோர்வு, அதிக தூக்கம், உடல் எடை கூடுவது, மன உளைச்சல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மை என பலவிதமான அறிகுறிகள் ஏற்படும்.
* பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், சீரான ரத்தப்போக்கு இருக்காது. முதல் இரண்டு நாட்களிலேயே ரத்தப்போக்கு நின்றுவிடுவது அல்லது மாதவிடாய் காலம் முடிந்தும் அதிகமான ரத்தப்போக்கு வெளியேறுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
* ஹார்மோன் சமநிலையின்மை என்பது அவரவர் உடலுக்கு ஏற்றவாறு நிகழும். இதில், பொதுவான சில அறிகுறிகளை மட்டுமே கண்டறிந்து, தீர்வு காண இயலாது. எந்த சுரப்பில் சமநிலையின்மை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கான தீர்வு காண்பதே சரியான வழிமுறை.
* திருமணமான பெண்களுக்கு, ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். கருத்தரிப்பதில் சிக்கல், கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு இதன் அறிகுறியாக உடல் பருமன் ஏற்படும். இதை, ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம்.
* ஹார்மோன் குறைபாட்டால், பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் நோய் தைராய்டு. இந்த நோயில், இரண்டு வகைகள் உண்டு. ஹைபர் தைராய்டு (Hyper thyroidism) மற்றும் ஹைபோ தைராய்டு (Hypothyroidism). ஆனால், பெண்களுக்கு பொதுவாக ஏற்படுவது தைராய்டு சுரப்பிக் குறைபாட்டால் ஏற்படும் ஹைபோதைராய்டு. ஆரம்பக் காலத்திலேயே, தகுந்த மாத்திரைகள் மூலம் இதை சரிசெய்துவிட முடியும்.
* ஹார்மோன் குறைபாடு, பரம்பரை நோயல்ல. ஆனால், தைராய்டு போன்ற நோய், ஒருவரின் குடும்பத்தினருக்கு இருந்தால், அவர்களை சார்ந்தவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
* ஹார்மோன் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு நோய் பிசிஓடி என்கிற பாலிசிஸ்டிக் ஓவரி நோய். இந்த நோயின் தாக்கத்தால், முகத்திலும் கைகளிலும் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், மன உளைச்சல், முடி உதிர்வது, எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
* ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக நீரிழிவு நோயும் தாக்கலாம். நமது உடலில் தேவையான அளவில் இன்சுலின் சுரக்காதபோதுதான் இந்த நோய் ஏற்படுகிறது. ஹார்மோன் குறைபாடு காரணமாக, இந்த இன்சுலின் சுரப்பி சுரக்காமல் போகலாம். இதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படலாம்.
* பச்சைக் காய்கறிகளை அதிகமாக உண்பதும் பீட்சா, பர்கர் பதப்படுத்திய குளிர்பானங்கள், துரித உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்ப்பதும் இன்றைய காலகட்டத்தில் ஹார்மோன் சமநிலையின்மையில் இருந்து ஓரளவு காக்கும்.