பெண்கள் உலகம்

தனியாக வசிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

Published On 2024-12-16 04:20 GMT   |   Update On 2024-12-16 04:20 GMT
  • கடவுச்சொல்லுடன் கூடிய டிஜிட்டல் பூட்டை நிறுவலாம்.
  • டோர் பெல் கேமராக்கள், ஸ்மார்ட் சாதனங்கள் கண்காணிப்புக்கு உதவும்.

இப்போது பணி நிமித்தமாக வெளியூரில் தங்கியிருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. "அத்தகைய பெண்கள் பெரும்பாலும், பணிபுரியும் மகளிர் விடுதி அல்லது பிற பெண்களுடன் சேர்ந்து வீடு, அறை எடுத்து தங்குவதை விரும்புவார்கள். அதுதான் பாதுகாப்பு என்று கருதுவார்கள்.

ஆனால் சில பெண்கள், பல்வேறு காரணங்களால், தனியாக வசிக்கும் நிலை இருக்கலாம்.

இந்த நிலையில், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு, பின்வரும் குறிப்புகளை மனதில் வைத்து செயல்பட வேண்டும்...


* தனியாக வசிக்கும் பெண், தாள் இருக்கும் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பின் கதவுகள், ஜன்னல்கள், பூட்டுகள், கிரில்கள் ஆகியவை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பயோமெட்ரிக் அனுமதியுடன் கூடிய ஸ்மார்ட் கதவு பூட்டு அல்லது கடவுச்சொல்லுடன் கூடிய டிஜிட்டல் பூட்டை நிறுவலாம்.

* ஒரு புதிய வீட்டுக்குச் செல்லும்போது, பூட்டுகளை மாற்றி, மாற்று சாவிகள் யாருக்கும் எளிதாக கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செக்யூரிட்டி கேமராக்கள், டோர் பெல் கேமராக்கள் போன்ற ஸ்மார்ட் சாதனங்கள், கண்காணிப்புக்கு உதவும். நாம் வெளியில் இருந்தாலும் வீட்டை கவனிக்க இதுபோன்ற சாதனங்கள் கைகொடுக்கும்.

* நாய் வளர்ப்பதை பலரும் சிறந்த பாதுகாப்பு உத்தியாக கருதுகிறார்கள். பராமரிக்க முடிந்தால், செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் இருந்தால், நாய் வளர்க்கலாம்.


* நம்பிக்கைக்குரிய அக்கம்பக்கத்து பெண்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். வெளியாட்களை, அவர்கள் பெண்களாகவே இருந்தாலும் வீட்டுக்கு வரவழைப்பதை தவிர்க்கலாம்.

* தனியாக வசிக்கும் பெண்கள், தங்களின் முகவரி, தொடர்பு விவரங்களை குடும்பத்தினர். நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

* போலீஸ் அவசர அழைப்பு எண் (100), தேசிய மகளிர் ஆணைய (NCW) உதவி எண் (011-23237166), பெண்கள் உதவி எண் (181) போன்ற அவசர தொடர்பு எண்களை நினைவில் வைத்திருக்கவும்.

* Safetipin, bSafe, Vithu காப்பு செயலிகளை செல்போனில் பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பகுதி மகளிர் குழுக்களுடன் இணைய முயற்சிக்கவும், ஆன்லைன் மன்றங்களில் சேரவும் அல்லது சமூக நிகழ்வுகளில் பங்கேற்கவும் ஆர்வம் காட்டலாம்.

* நீங்கள் வசிக்கும் பகுதி எவ்வளவு பாதுகாப்பாகத் தோன்றினாலும், எப்போதும் சுற்றுப்புறத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தனிமையான பகுதிகளில், குறிப்பாக இரவில் நடப்பதைத் தவிர்க்கவும். கூடியவரை, பொதுபோக்குவரத்து அல்லது சரிபார்க்கப்பட்ட ஓட்டுநருடன், சவாரி-பகிர்வு சேவைகளைப் பயன்படுத்தவும்.

* தனியாக வசிப்பதை, முன்பின் தெரியாதவர்களிடம் தெரிவிக்க வேண்டாம். அவர்கள், நீங்கள் அடிக்கடி பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி.


* சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடப்படும் பதிவுகள், ஒருவரின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். தனியாக வாழ்வதை சமூக ஊடகங்களிலும் குறிப்பிடாமல். கவனமாக இருக்க வேண்டும். இருப்பிடம் அல்லது முகவரி போன்ற எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் இணையத்தில் எல்லோரும் அறியும் வகையில் தெரிவிக்க வேண்டாம்.

* எந்த ஒரு சூழ்நிலையிலும், தமது தனிப்பட்ட பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுவது. தனியாக வசிக்கும் பெண்களின் பொறுப்பு.

Tags:    

Similar News