மார்பக புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளும் அதன் உண்மைகளும்!
- மார்பக புற்றுநோயாளிகளில் 20 சதவீதம் மட்டுமே குடும்பவழி பாதிக்கப்பட்டவர்கள்.
- கட்டிகள் மேமோகிராமால் கூட கண்டுபிடிக்கப்படாமல் போகலாம்.
நீண்ட காலமாக பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். பலரும் ஆரம்ப கட்டத்திலேயே அதை கண்டறியாமல் விடுவதால் அதன் தீவிரமும் அதிகமாகி விடுகிறது. அதற்கு காரணம் மார்பக புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையே.
பரம்பரை நோய் அல்ல:
கண்டிப்பாக. எல்லோருக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் தான் மார்பக புற்றுநோய் வரும் என்றெல்லாம் எந்த அவசியமும் இல்லை.
புள்ளி விவரங்களின் படி ஒட்டுமொத்தமாக 100 சதவீத மார்பக புற்றுநோயாளிகளில் 20 சதவீதம் மட்டுமே குடும்பவழி பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பிற 80 சதவீதம் நோயாளிகளுக்கு பல்வேறு காரணங்களால் மார்பக புற்றுநோய் பாதித்துள்ளது.
புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்:
மார்பக புற்றுநோய் மட்டுமின்றி அனைத்து விதமான புற்றுநோய்களுமே வராமல் இருக்க ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மிக அவசியம். சரியான உயரம், எடை, பிஎம்ஐ நிர்வகித்தல் மற்றும் புகைப்பழக்கம், குடிப்பழக்கத்தை தவிர்த்தல் அவசியமானது. ஆனால் இதனால் மட்டுமே உங்களுக்கு புற்றுநோய் வராது என்று உறுதி கொடுக்க முடியாது.
ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட பல்வேறு விதமான காரணங்கள் இருக்கின்றன. எனவே, குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் புற்றுநோய் காரணமாக கருத முடியாது. அதே சமயம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும்.
உள்ளாடை:
இந்த சந்தேகம் பலருக்கும் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இது வீணாக பரவும் பொய் வதந்தி மட்டுமே. எந்த விதமான உள்ளாடைகளையும் பயன்படுத்துவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு கிடையாது என்பதே உண்மை.
சர்க்கரை அளவு அதிகரித்தல்:
எந்த ஒரு தனித்த உணவும் புற்றுநோயை உண்டாக்கும் என்று நிரூபிக்கப்பட்டதில்லை. ஆனால், நீண்ட நாட்களாகவே நீங்கள் அதிகமான அளவு சர்க்கரையை எடுத்து கொண்டு வரும்போது அதன் சங்கிலி தொடராக அதிகமான ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ண வேண்டியிருக்கும். இதனால் உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
இதுவே உங்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் காரணமாக அமையலாம். மேலும், பொதுவாகவே அதிகமான சர்க்கரையை எடுத்து கொள்வது நல்லது அல்ல.
வருடம் ஒருமுறை மேமோகிராம்:
பலரும் வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் எடுப்பதால் மட்டுமே எந்தவிதமான புற்றுநோய் கட்டிகளையும் கண்டறிந்து விட முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், சில நேரங்களில் சிறிய கட்டிகள் மேமோகிராமால் கூட கண்டுபிடிக்கப்படாமல் போகலாம்.
கிட்டத்தட்ட 20 சதவீத தவறுகள் இப்படியும் நடக்கிறது. அதற்காகத்தான் சுய பரிசோதனை முறையை பயன்படுத்த வேண்டும். அதே சமயம் வருடம் ஒருமுறை மேமோகிராம் செய்வது நல்லது.
வாசனை திரவியங்கள்:
இதுவரை விஞ்ஞானப்பூர்வமாக எந்தவிதமான சான்றுகளும் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதாக கண்டறியவில்லை. எனவே, அதற்கும் மார்பக புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
புற்றுநோய் கட்டி வலியற்றதாக இருக்குமா?
மார்பக புற்றுநோய் கட்டிகளிலேயே இரண்டு வகை உள்ளது. இது நார்மல் கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் என்று உள்ளது. அது வலியற்றதாகவும் அல்லது வலி கொடுப்பதாகவும் இருக்கலாம்.
ஆனால், வலி கொடுக்கவில்லை என்பதற்காக அது நார்மல் என்றும் சொல்லிவிட முடியாது. எனவே நீங்கள் முதலில் சுய பரிசோதனை மூலமாக தெரிந்து கொள்ளுதல். மேமோகிராம் மற்றும் இதர தேவையான பரிசோதனைகளை செய்து உறுதி செய்து கொள்ளுதல் அவசியம்.
வயதான மற்றும் நடுத்தர வயது பெண்களுக்கு மட்டும்தான் வருமா?
இல்லை இதுவும் நீண்ட நாட்களாக நம்பப்பட்டு வரும் உண்மையற்ற விஷயம். மார்பக புற்றுநோய் இளம் வயதினிருக்கும் ஏற்படும். 20-30 சதவீதத்திற்கும் மேல் 20-லிருந்து 40 வயது வரை உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது இயல்பான ஒன்றாக உள்ளது.
பலருக்கும் 20 , 25 வயதிலேயே மார்பக புற்றுநோய் வந்து விடுகிறது. இதை முன்னரே அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. அதனால் சுய பரிசோதனையும் அதை தொடர்ந்து மருத்துவரிடம் ஆலோசனை செய்வதும் அதை தடுக்கவும் முன்கூட்டியே சிகிச்சை அளிக்கவும் முடியும்.
பெண்களுக்கு மட்டும்தான் வருமா?
இதுவும் பல நாட்களாக நம்பபடும் ஒன்று. மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் ஏற்படும். ஆனால், பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மிக மிக அரிதாகவே மார்பக பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால், ஆண்களுக்கும் அரிதாக மார்பக புற்றுநோய் ஏற்படும் என்பதே உண்மை.
மார்பகத்தில் ஏதும் காயங்கள்:
மார்பகத்தில் காயங்கள் ஏற்படுவதால் மார்பக புற்றுநோய் வராது. அந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் பரிசோதனைகள் மூலம் ஏற்கனவே இருக்கும் புற்றுநோய் கட்டிகளை கண்டுபிடிக்க வாய்ப்புகள் இருக்கின்றதே தவிர காயம் ஏற்பட்டதால் உங்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு இல்லை.