சர்க்கரை வியாதி இருக்கும் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் வராமல் தடுப்பது எப்படி?
- முக்கியமான விஷயமே சர்க்கரை கட்டுப்பாடு தான்.
- முதல் அறிவுரை உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
சர்க்கரை வியாதி இருக்கும் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் வராமல் கண்டிப்பாக தடுக்க முடியும். அதற்கான வழிமுறைகள் என்னவென்றால், முதல் முக்கியமான விஷயமே அவர்களின் சர்க்கரை கட்டுப்பாடு தான்.
சாப்பிடுவதற்கு முன்பு ரத்த சர்க்கரை அளவு 110-க்குள் இருக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து 160-க்குள் இருக்க வேண்டும். 3 மாத கட்டுப்பாடு 6.5-க்குள் இருக்க வேண்டும்.
சர்க்கரையை இதே அளவில் வைத்து அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் கண்டிப்பாக பாலியல் உறவு முறைகளில் பிரச்சனைகள் வராது. ஆனால் இதுவே அதிகமாகும் போது தான் தொற்றுக்கள் ஏற்படும்.
எனவே இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முக்கியமான முதல் அறிவுரை உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
இதுதவிர சில பெண்கள், எனக்கு எல்லாமே கட்டுப்பாட்டில் இருக்கிறது ஆனாலும் பாலியல் உணர்வு குறைவாக இருக்கிறது, ஆர்வம் குறைவாக இருக்கிறது என்று சொல்வார்கள். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்களுக்கு ரத்த அழுத்தமும் இருக்கும்.
ரத்த அழுத்தத்துக்கு உட்கொள்கிற மாத்திரைகள் நரம்பு மண்டலங்களில் பாதிப்பை உண்டாக்கி அதன் மூலமாக அவர்களுடைய உறவு கொள்ளும் முறைகளையும் பாதிக்கிறது. இது ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளின் பக்க விளைவுகள் ஆகும்.
எனவே ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு அந்த மாத்திரையின் பக்க விளைவால் இந்த பிரச்சனைகள் வரலாம்.
எனவே உணவு பழக்க வழக்க முறைகளை மாற்றுங்கள், உடற்பயிற்சிகளை அதிகப்படுத்துங்கள், முறையாக சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது இதற்கான சில சிகிச்சைகளையும் முறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
இதனால் ஏற்படுகிற பின் விளைவுகள், சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாததால் ஏற்படுகிற பிரச்சனைகளை புரிந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான வழி முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தகுதியுள்ள மருத்துவரை அணுகி முறையாக உறவு கொள்வதற்கான வழிமுறைகளை சீர் செய்து கொள்ள வேண்டும். முறையாக பார்த்துக்கொண்டால் கண்டிப்பாக பின்விளைவுகள் வராது.
சர்க்கரை நோய் இருக்கிற பெண்களுக்கு சிறுநீர் தொற்று, பெண்ணுறுப்பில் தொற்று ஆகியவை தவிர அவர்களுக்கு அந்த இடத்தில் வேறு பல வகையிலும் தொற்றுக்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதனால் உறவு கொள்வதில் ரொம்ப பிரச்சனைகள் இருக்கும்.
சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும், சில நேரங்களில் காய்ச்சல் கூட வரும். இவை எல்லாமே இந்த பிரச்சனைகளின் வெளிப்பாடுதான்.
ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை:
எனவே சர்க்கரை வியாதி இருக்கின்ற பெண்கள் முறையாக, முழுமையாக, ஆரம்ப நிலையிலேயே அதற்கான சிகிச்சைகளை பெற வேண்டும். அந்த சிகிச்சை முறைகள் பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சர்க்கரை நோய் இருப்பதை கண்டுபிடித்த பின்பு சர்க்கரை நோய் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள்.
அதை எப்படி கையாண்டு அதில் இருந்து வெளிவருவது என்பதை முறையாக சில பரிசோதனை முறைகள் மூலம் தெரிந்து கொண்டு அதை செயல்படுத்துங்கள். இதன் மூலம் சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், பாலியல் உறவு பிரச்சனைகளும், குழந்தையின்மை பிரச்சனைகளும் கண்டிப்பாக சரியாகும்.