பெண்கள் உலகம்
null

தாம்பத்தியத்தின் போது வலி ஏற்படுவதற்கு காரணம் என்ன தெரியுமா?

Published On 2025-01-02 09:07 GMT   |   Update On 2025-01-03 06:58 GMT
  • வலி மிகுந்த தாம்பத்தியத்திற்கு காரணம் உயவு இல்லாதது தான்.
  • திருமணமான புதிதில் தாம்பத்திய வலி இருப்பது இயல்பானது.

வலி மிகுந்த உடலுறவுக்கான மருத்துவச் சொல் டிஸ்பேரூனியா ஆகும். இது தாம்பத்தியத்தின் போது அல்லது அதற்கு பிறகு பிறப்புறுப்பில் ஏற்படும் வலியாகும். உடல் சார்ந்த மற்றும் உளவியல் பிரச்சினைகள் காரணமாக கூட ஏற்படலாம்.


உடல் சார்ந்த காரணங்கள்

* வலி மிகுந்த தாம்பத்தியத்தின் பெரும்பான்மையான காரணம் உயவு இல்லாதது தான். பொதுவாக கர்ப்பப்பை வாய் சுரப்பிகள் சளி போன்ற ஒரு திரவத்தை சுரக்கின்றது. இது தவிர தாம்பத்திய முந்தைய உடல் தூண்டலின் போது கூடுதலான திரவங்கள் சுரக்கும்.

குறிப்பாக யோனிக்கு அருகில் அமைந்துள்ள பர்தோலின் சுரப்பிகள் மற்றும் ஸ்கீன் சுரப்பிகள் தாம்பத்தியத்தின் போது கூடுதல் உயவூட்டலை உருவாக்குகின்றது. இவை பெரும்பாலும் தாம்பத்திய முன்விளையாட்டின் விளைவாகும். திருமணமான புதிதில் தாம்பத்திய வலி இருப்பது இயல்பானது.

* தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த பிரச்சினை வரலாம். இதற்கு காரணம் அப்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது தான்.

* யோனி சுவர் தசைகளின் தன்னிச்சையான பிடிப்புகள் (வெஜினிஸ்மஸ்), யோனி சரியாக வளர்ச்சியடையாத நிலை (அஜெனிசிஸ்), ஹைமன் சவ்வு யோனித் திறப்பை முழுமையாக மூடி இருப்பது (இம்பர்போரேட் ஹைமென்), சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று, கருப்பைச் சரிவு, இடுப்பு அழற்சி நோய், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், அடினோமயோசிஸ், மூல நோய், இடுப்பு பகுதி அறுவை சிகிச்சைக்குப் பின்னர், புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றால் தாம்பத்தியத்தின் போது வலி காணப்படும்.

* தாம்பத்திய முந்தைய தூண்டலின் போது ஆண்களுக்கு சுமார் 2 முதல் 5 மி.லி. அளவு வரை ஒரு தெளிவான திரவம் சுரக்கும். இது கவ்வர் சுரப்பிகள் மற்றும் லிட்ரே சுரப்பியில் இருந்து சுரக்கிறது. இது தாம்பத்தியத்தின் போது உயவை அதிகரிக்கிறது.


உணர்ச்சி சார்ந்த காரணங்கள்:

தாம்பத்திய செயல்பாடுகளுடன் உணர்ச்சிகள் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளன. எனவே அவை தாம்பத்திய வலியில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

உளவியல் சிக்கல்கள்:

மனச்சோர்வு, உடல் தோற்றத்தைப் பற்றிய கவலைகள், நெருக்கம் அல்லது உறவுச் சிக்கல்கள் பற்றிய பயம், புதிய இடம் போன்றவை மனச்சோர்வு அல்லது வலியை ஏற்படுத்தும்.


மன அழுத்தம்:

வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக இடுப்பு பகுதி தசைகள் இறுக்கமடைகின்றன. இது தாம்பத்தியத்தின் போது வலியை ஏற்படுத்தும்.

உணவு மற்றும் பழக்கவழக்கங்கள்:

ஈஸ்ட்ரோஜன் குறைவு அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஏற்படும் மிகக் குறைவான உயவினால் வலி மிகுந்த தாம்பத்தியம் ஏற்படுகிறது.

இதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் (ஆளி விதைகள், அலிசி விதைகள், சோயாபீன், உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், கருப்பு திராட்சைப்பழம், பூண்டு, பெருங்காயம், எள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரக்கோலி, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட், பெர்ரி வகை பழங்கள், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் கோதுமை) சாப்பிட வேண்டும்.

டிசென்சிடிசேஷன் சிகிச்சை:

வலியை குறைக்கக்கூடிய யோனி தளர்வு பயிற்சிகள் செய்ய வேண்டும். ஹெகல் பயிற்சி நல்ல பலனைத் தரும்.


உளவியல் ஆலோசனை:

வலி மிகுந்த தாம்பத்தியத்தின் காரணமாக நீங்களும் உங்கள் துணையும் நெருக்கத்தைத் தவிர்த்துள்ளீர்கள் என்றால், உங்கள் துணையுடன் தொடர்பை மேம்படுத்த மனம் விட்டு பேசி பாலியல் நெருக்கத்தை உருவாக்க வேண்டும். அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, எதிர்மறை சிந்தனைகள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.

Tags:    

Similar News