செய்திகள்

கமல் மக்களை சந்திப்பதில் தவறில்லை: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

Published On 2017-11-08 07:54 GMT   |   Update On 2017-11-08 07:54 GMT
தண்டையார் பேட்டையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ‘கமல் மக்களை சந்திப்பதில் தவறில்லை’ என்று கூறி உள்ளார்.
ராயபுரம்:

சென்னை தண்டையார் பேட்டையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செல்லூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.1,500 கோடி கேட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொள்ளை அடிப்பதற்காக நிதி கேட்டு இருப்பதாக பொறுப்பற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார்.

மத்திய அரசு நிதி ஒதுக்கினால் அதனை எந்தெந்த துறைக்கு எவ்வாறு செலவிட வேண்டும் என்று ஆடிட்டர் தணிக்கையும் உள்ளது. இதுகூட தெரியாமல் துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் எப்படி இருந்தார் என்று தெரியவில்லை.

எதற்கெடுத்தாலும் இந்த அரசை குறை கூறவதையே அவர் வேலையாக வைத்துள்ளார். எதிர்க்கட்சி மற்றும் பிற கட்சியினர் எங்களை குறை கூறுவதை எளிதாக எடுத்துக் கொள்வது இல்லை. நாங்கள் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அதுதான் எங்களுக்கு முதல் வேலை.

காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது. பெரிய வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வெளி மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்படுகிறது. காய்கறி விலை கட்டுக்குள் இருக்கிறது.



நடிகர் கமல்ஹாசன் மக்களை சந்திக்க சுற்றுப் பயணம் செய்வதாக கூறியுள்ளார். மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அது அவர் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், வடசென்னை வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News