2 முதியவர்கள் வெட்டிக்கொலை-குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
- 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது70). விவசாயி. இவரது மனைவி தெரசாள் (65). இவர்களுக்கு சகாயராணி, விக்டோரியா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சகாயராணிக்கு திருமணம் ஆகவில்லை. இளைய மகள் விக்டோரியாவிற்கு திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் லூர்துசாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். மேலும், மகள் சகாயராணி வேலைக்கு சென்று இவர்களை பராமரித்து வந்தார். லூர்துசாமி மனைவி தெரசாள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மகள் சகாயராணி தாயாருடன் தங்கி அவரை கவனித்து வருகிறார்.
இதனால் தனிமையில் இருந்த லூர்துசாமியை கவனித்துக்கொள்ள அவரது மனைவி தெரசாளின் தங்கை எலிசபெத் (60) என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒன்னல்வாடிக்கு வந்து அங்கேயே தங்கி அவரை கவனித்து வந்தார்.
நேற்று மாலை, லூர்துசாமி, கொழுந்தியாள் எலிசபெத் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் லூர்துசாமி, எலிசபெத் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
தொடர்ந்து மர்ம கும்பல் அந்த வீட்டுக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. வீட்டில் புகை வந்ததை கண்டு அப்பகுதி மக்கள் ஓசூர் டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு லூர்துசாமி, எலிசபெத் ஆகியோர் கொலை செய்யப்பட்டு தீயில் கருகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எலிசபெத் காதில் அணிந்து இருந்த தோடு, கழுத்தில் அணிந்து இருந்த நகை திருட்டு போய் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இந்த மர்மகும்பலை பிடிக்க ஓசூர் டி.எஸ்.பி. சிந்து தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வலைவீசி தேடி வருகின்றனர்.