ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது
- மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றனர்.
- ரேசன் அரிசி மூட்டைகள் நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட த்தின் பல்வேறு இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் நுகர்வோருக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட அரிசி மற்றும் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கப்படும் சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
இதையடுத்து பறக்கும் படை தனி தாசில்தார் ஜெனிட்டா மேரி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
தொடர்ந்து, நல்லத்துக்குடி ரேசன் கடையில் உள்ள அரிசி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அவருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு விரைந்தார்.
பின்னர், கடையின் அருகில் 2 நபர்கள் தனித்தனி மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அந்த அரிசி மூட்டைகள் நல்லத்துக்குடி ரேசன் கடையில் இருந்து வாங்கி சென்றது என்பது உறுதியானது.
இதையடுத்து ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தனி தாசில்தார் ஜெனிட்டாமேரி பறிமுதல் செய்து அவற்றை நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.