செய்திகள்

ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி மடப்புரம் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2016-07-23 22:06 IST   |   Update On 2016-07-23 22:06:00 IST
ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி மடப்புரம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புவனம்:

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், மாதந்தோறும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்தகோவிலில், ஆடிமாதம் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தற்போது, ஆடிமாதம் தொடங்கியதையொட்டி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையொட்டி அய்யனார், பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரோஜாலிசுமதா தலைமையில் அறங்காவல் குழு தலைவர் ஜெயசங்கர், அறங்காவல் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், பாஸ்கரன், சரவணன், கமலாசிகாமணி ஆகியோர் செய்திருந்தனர்.

இதனையொட்டி திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேசு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Similar News