5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 62 பேர்- மாஜிஸ்திரேட்டிடம் விளையாட்டு வீராங்கனை ரகசிய வாக்குமூலம்
- இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர்.
- அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையான 18 வயது பள்ளி மாணவி ஒருவர், 5 ஆண்டுகளாக பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது.
இந்த அதிர்ச்சி தகவலை அந்த மாணவி, தான் படித்த பள்ளியில் வழங்கப்பட்ட கவுன்சிலிங்கில் தெரிவித்தார். அவர் 13 வயதில் இருந்து, பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி தனது காதலன் மற்றும் காதலனின் நண்பர்களால் பலமுறை கூட்டு பலாத்காரமும் செய்யப்பட்டிருக்கிறார்.
பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். யார் யாரெல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்? என்று வீராங்கனையிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் தன்னை 62 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். மேலும் தன்னை சீரழித்தவர்களில் பலரது பெயர் விவரங்களையும் அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 62 பேர் மீதும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
வீராங்கனையை சீரழித்தவர்களில் அவரது காதலன், காதலனின் நண்பர்கள், உடற்பயிற்சி ஆசிரியர், ஆட்டோ டிரைவர்கள், மீன் வியாபாரிகள், உடன் படிக்கும் மாணவர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் வீராங்கனையின் காதலன் உள்பட 20 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோவை காண்பித்து தொடர்ந்து சீரழித்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.
பள்ளி படிக்கும் வீராங்கனை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனையிடம் மாஜிஸ்திரேட்டு ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் அடூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் விளையாட்டு வீராங்கனை நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் மற்றும் தன்னை சீரழித்தவர்கள் பற்றிய விவரங்களை விளையாட்டு வீராங்கனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார்.
பள்ளி படிக்கும் விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பத்தினம் திட்டா டவுன், கொன்னி, ரன்னி, மலையாளப்புழா, பந்தளம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 62 பேரில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 44 பேரை போலீசார் கைது செய்துவிட்டனர். அடையாளம் காணப்படாத 4 பேரை அடையாளம் காணவும், மீதமுள்ளவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களில் 15 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்த வழக்கின் பொறுப்பு அதிகாரியான போலீஸ் டி.ஐ.ஜி. அஜீதா பேகம் தெரிவித்துள்ளார்.