இந்தியா

ஆட்டோ டிரைவரை தாக்கிய இளம்பெண்- வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை

Published On 2025-01-15 14:56 IST   |   Update On 2025-01-15 14:56:00 IST
  • ஆட்டோ டிரைவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
  • மிர்சாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ள தற்போதைய காலக்கட்டத்தில், அதனை பயன்படுத்தி வித்தியாசமான வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிடுகிறார்கள். அவ்வாறு பதிவிடுபவர்களில் பலர், வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை வாங்க வேண்டும் என்று எடுக்கும் வீடியோக்களின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மிர்சாபூரில் ஆட்டோ டிரைவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், உண்மைக்கு மாறான கருத்துகளை கூறி வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் அந்த ஆட்டோ டிரைவர்.

ஆட்டோவில் இருந்து அவர்களை இறக்கிவிட்டு கட்டணம் கேட்டபோது, அவர்கள் மாணவிகள் என்று கூறி கட்டணம் தர மறுத்துவிட்டனர். நான் தொடர்ந்து கட்டணம் கேட்டபோது, அவர்களில் ஒருவர் என் காலரைப் பிடித்து, தனது மொபைலை சகோதரியிடம் கொடுத்து அதை பதிவு செய்யச் சொன்னார். பின்னர் நான் கட்டணம் வேண்டாம் என்று சொன்னேன். நான் அவர்களைத் தொடக்கூட இல்லை. எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறிய ஆட்டோ டிரைவர் அவரது மார்பில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இதனிடையே, வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பெண் இதுகுறித்து கூறுகையில், அந்த நபர் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதால் அவரை அடித்தேன். இதனை தொடர்ந்து எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்தன. இதன்பின்னரே அந்த வீடியோவை நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன் என்று கூறினார்.

இருவரின் முரண்பட்ட தகவல்களால் யார் மீது தவறு உள்ளது என்பது குறித்து மிர்சாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



Tags:    

Similar News