டெல்லியில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
- டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் புறப்படும்போது விமானங்கள் பாதிக்கப்படலாம்.
- டெல்லியில் காலையில் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. அடர்த்தியான மூடுபனியுடன் காணப்படும் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
பல இடங்களில் தெரிவுநிலை பூஜ்ஜியமாகக் குறைந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அதேபோல் ரெயில் மற்றும் விமான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.
விமானச் செயல்பாடுகள் சீராக இருக்கும் என்றும் ஆனால் விமானப் பயணிகளை தங்கள் விமானங்களைப் பற்றி தொடர்ந்து அறிந்துகொள்ளும்படி விமான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் புறப்படும்போது விமானங்கள் பாதிக்கப்படலாம். புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் வருந்துகிறோம் என்று டெல்லி விமான நிலையம் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளது.
நேற்று நிலவிய பனிமூட்டம் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை 6:30 மணி வரை குறைந்தது 39 ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
டெல்லியில் காலையில் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காலையில் அடர்த்தியான மூடுபனியும் பின்னர் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.