ஆந்திராவில் தடையை மீறி களைகட்டிய சேவல் சண்டை- ரூ.400 கோடிக்கு மேல் பந்தயம் கட்டினர்
- சினிமா செட்டிங் போல் அமைக்கப்பட்டு இருந்த பெரிய கூண்டுகளில் இருந்து சேவல் திறந்து விடப்பட்டன.
- சேவல்கள் சண்டையிடும் போது கத்தி வெட்டுப்பட்டு சில சேவல்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.
ஆந்திராவில் சங்கராந்தியையொட்டி தடையை மீறி ஆண்டுதோறும் பாரம்பரியமான சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
நேற்று சங்கராந்தி பண்டிகை என்பதால் ஆந்திராவில் ஆட்டுக்கிடா சண்டை, பட்டம் விடுதல், சேவல் சண்டை கோலாகலமாக நடந்தது.
தடையை மீறி பாரம்பரிய சேவல் சண்டை ஆங்காங்கே நடந்தது. கிருஷ்ணா மாவட்டத்தில் எட்புகல்லு, உப்பலூர், காங்கிபாடு, அம்பாபுரம் உள்ளிட்ட இடங்களில் சேவல் சண்டை நடந்தது. சேவல் சண்டை பிரம்மாண்ட திரைகள் மற்றும் எல்.இ.டி. டி.வி.கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர்.
சினிமா செட்டிங் போல் அமைக்கப்பட்டு இருந்த பெரிய கூண்டுகளில் இருந்து சேவல் திறந்து விடப்பட்டன.
ஆக்ரோஷமாக கூண்டுகளில் இருந்து வெளியே வந்த சேவல்கள் நீயா நானா என போட்டி போட்டு அந்தரத்தில் குதித்து சண்டையிட்டன. சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்பட்டு இருந்தன.
இதனால் சேவல்கள் சண்டையிடும் போது கத்தி வெட்டுப்பட்டு சில சேவல்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.
சேவல் சண்டையை பார்க்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து இருந்ததால் கூட்டம் அலைமோதியது.
சண்டையிடும் சேவல்கள் மீது லட்சக்கணக்கில் போட்டி போட்டு பந்தயம் கட்டினர். இதனால் நேற்று ஒரே நாளில் கிருஷ்ணா மாவட்டத்தில் மட்டும் ரூ.400 கோடிக்கு மேல் சேவல் பந்தயம் நடந்ததாக கூறப்படுகிறது.