துரோக அரசியல் என்ற அமித் ஷாவின் விமர்சனத்திற்கு சரத் பவார் அளித்த பதில்...
- நான் 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தேன்.
- அப்போது அமித் ஷா எங்கிருந்தார் என்பது எனக்குத் தெரியாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசும்போது, 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சரத் பவாரின் துரோக அரசியல், 2024 மகாராஷ்டிர மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது எனக் கூறினார்.
இந்த நிலையில் அமித் ஷாவின் விமர்சனத்திற்கு சரத் பவார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "நான் 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தேன். அப்போது அமித் ஷா எங்கிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. நான் முதல்வராக இருந்தபோது, ஜன சங்கத்தை சேர்ந்த உத்தமராவ் பாட்டீல் போன்றவர்கள் (பாஜக-வின் முன்னோடிகள்) என்னுடைய மந்திரி சபையில் இடம் பிடித்தனர். அரசியல் தலைவர்களிடையே முன்னதாக நல்ல தொடர்பு இருந்தது. தற்போது அது இல்லை" என்றார்.
இதற்கு சான்றாக 2001-ம் ஆண்டு புஜ் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தான் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட, வாஜ்பாய் தன்னை பேரிடர் நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவராக்கினார் என சரத் பவார் தெரிவித்தார்.