இந்தியா

மகா கும்பமேளா: பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் முதல் நாளில் 1½ கோடி பக்தர்கள் புனித நீராடினர்

Published On 2025-01-14 07:45 IST   |   Update On 2025-01-14 07:45:00 IST
  • 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளாவின் முதல் நாளான நேற்று 1½ கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
  • சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்துக்கள் புனிதமாக கருதும் விழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. அதிகமான மக்கள் கூடும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த கும்பமேளா நிகழ்வுகள் பிரயாக்ராஜ், அரித்துவார், உஜ்ஜையின், நாசிக் ஆகிய இடங்களில் நடைபெற்றாலும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றது.

மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் இந்த ஆண்டு நடைபெறுவது 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பது இந்த கும்பமேளாவுக்கு கூடுதல் சிறப்பு.

மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டே தொடங்கியது. இந்த ஆண்டு பிறந்தது முதலே உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சாதுக்கள், துறவிகள், ஆன்மிக பெரியவர்கள், வெளிநாட்டினர் மற்றும் பக்தர்கள் லட்சக்கணக்கில் பிரயாக்ராஜ் நோக்கி வரத்தொடங்கினர்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 83 லட்சம் பேர் கங்கை நதியில் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் முழுவதும் தோரணங்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் தங்குவதற்காக 10 ஆயிரம் குடில்களை கொண்ட தற்காலிக நகரம் அமைக்கப்பட்டு உள்ளது. திரிவேணி சங்கமம் பகுதி இரவு நேரத்திலும் பகலைப்போல் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

புகழ் பெற்ற மகா கும்பமேளா, பவுஷிய பூர்ணிமா தினமான நேற்று பஜனை மற்றும் பக்திக்கோஷங்களுக்கு இடையே கோலாகலமாக தொடங்கியது.

சாதுக்களையும், துறவிகளையும் தொடர்ந்து லட்சக்கணக்கானோர் கங்கை நதியை நோக்கி ஜெய் கங்கா மாதா என்று கோஷமிட்டபடியே நடந்து சென்றனர்.

அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளாவின் முதல் நாளான நேற்று 1½ கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

புனித நீராடிய பலர், ஆங்காங்கே அமர்ந்து இருந்த துறவிகளிடம் ஆசி பெற்றனர். ரஷியா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பமேளா நடைபெறும் பகுதியில், பூஜைப் பொருட்களை விற்று பக்தர்களுக்கு திலகம் பூசுபவர்கள் மிகவும் பரபரப்பாக இருந்தனர். அவர்களிடம் ஏராளமானோர் காத்திருந்து திலகமிட்டதை காண முடிந்தது.

Tags:    

Similar News