மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து: காயத்துடன் உயிர் தப்பினார் கர்நாடக பெண் மந்திரி
- பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியபோது விபத்து.
- நாய் குறுக்கே வந்ததால் மோதமால் இருக்க டிரைவர் காரை திருப்பியபோது கட்டுப்பாட்டு இழந்து மரத்தில் கார் மோதல்.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மந்திரி சபையில் இடம் பிடித்துள்ள பெண் மந்திரி லட்சுமி ஹெப்பால்கர். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருந்து வருகிறார்.
இவர் தனது சகோதரர் சன்னராஜ் ஹட்டிஹோலியுடன் இன்று காலை 5 மணியளவில் பெலாகவி மாவட்டம் கிட்டூர் நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் ஒன்று சாலையில் குறுக்கே ஓடியது. நாய் மீது கார் மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார்.
அப்போது டிரைவின் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை அருகே உள்ள மரம் மீது வேகமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் கடுமையாக சேதம் அடைந்தது.
இதில் லட்சுமி ஹெப்பால்கருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. விபத்தின்போது காரில் உள்ள அனைத்து (6) ஏர்பேக்குகளும் ஓபன் ஆனதால் காரில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தனர்.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் லட்சுமி ஹெப்பால்கர் கலந்து கொண்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மந்திரிக்கு முகம் மற்றும் இடுப்பில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.