3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
- 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன் இஸ்கான் கோவிலை திறந்து வைக்க உள்ளார்.
- மகாயுதி கூட்டணியை சேர்ந்த 230 எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. டிசம்பர் மாதம் நடந்த மகாயுதி கூட்டணி பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர் இன்று (புதன்கிழமை) மும்பை வருகிறார். அவர் மும்பை கடற்படை டாக்யார்டில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில், ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்ஸ்ரீ போர்கப்பலை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.
இதேபோல மாலை 3.30 மணிக்கு நவிமும்பை, கார்கர் பகுதியில் 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன் இஸ்கான் கோவிலை திறந்து வைக்க உள்ளார்.
இதற்கிடையே அவர் மதியம் 12 மணியளவில் மும்பையில் மகாயுதி கூட்டணியை சேர்ந்த 230 எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி தலைமை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மும்பையை விட்டு வெளியே செல்ல கூடாது என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க. உயர்மட்ட தலைவர் ஒருவர் கூறுகையில், "ஜனவரி 15-ந் தேதி மும்பை வரும் பிரதமர் மோடி மகாயுதி கூட்டணி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளார். மகாயுதி கூட்டணி எம்.எல்.ஏ.க்களை ஒட்டுமொத்தமாக பிரதமர் சந்தித்து பேச உள்ளது இதுவே முதல் முறை." என்றார்.
பிரதமர் மோடி எம்.பி.க்களை சந்தித்து பேசி உள்ளார். இதேபோல தேசிய தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து பேசி உள்ளார். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் பா.ஜ.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.