செய்திகள்

ராமமோகன ராவ் மகனை விசாரணைக்கு அழைக்க புதிய திட்டம்: வருமான வரித்துறை ஏற்பாடு

Published On 2016-12-30 04:20 GMT   |   Update On 2016-12-30 04:20 GMT
ராமமோகன ராவ் மகன் விவேக்கை விசாரணைக்கு அழைப்பதற்காக நீதிமன்றத்தை நாட வருமான வரித்துறை திட்டமிட்டு உள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

கணக்கில் காட்டப்படாத பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்வதற்காக கடந்த 21-ந்தேதியில் இருந்து அதிரடி நடவடிக்கையில் வருமான வரித்துறை ஈடுபட்டு வருகிறது. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் இருந்து லட்சக்கணக்கான கருப்பு பணம், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக் மற்றும் நண்பர் வக்கீல் அமலநாதன் உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக ராம மோகன ராவின் மகன் விவேக் மற்றும் வக்கீல் அமலநாதன் ஆகியோருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி வக்கீல் அமலநாதன் உரிய ஆவணங்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

ஆனால் ராமமோகன ராவின் மகன் விவேக் தன்னுடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவரை கவனிக்க வேண்டி உள்ளது. எனவே அதிகாரிகள் முன்பு ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அதனை வருமானவரித்துறை ஏற்கவில்லை. விசாரணைக்கு ஆஜராக கோரி, விவேக்குக்கு சம்மன் அனுப்பியிருந்தனர், அதனை தொடர்ந்து நினைவூட்டும் கடிதமும், செல்போனில் குறுஞ்செய்தியும் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து 3 விதமாக விவேக்கை தொடர்பு கொண்டும் எந்த பலனும் வருமான வரித்துறைக்கு கிடைக்கவில்லை.

“விவேக் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் அளிக்கும் தகவல்களை ஏற்றுக்கொண்டாலும், விவேக்கை நேரில் ஆஜராவதை தான் முழுமையாக எதிர்பார்க்கிறோம். குறிப்பாக அவருடைய நண்பர் வக்கீல் அமலநாதன் ஆஜராவதை போன்று விவேக்கும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் அவர் இதுவரை முறையான விசாரணைக்கு வரவில்லை. இதனால் இதுபோன்ற தகவல்களை தெரிவித்து, விவேக்கை விசாரணைக்கு அழைப்பதற்காக நீதிமன்றத்தை நாட திட்டமிட்டு உள்ளோம். இதுதொடர்பாக சட்டவல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News