செய்திகள்

மேகதாதுவில் தடுப்பணை: கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்: ஜி.கே. வாசன்

Published On 2017-02-19 13:00 IST   |   Update On 2017-02-19 13:00:00 IST
மேகதாதுவில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நேற்றைய தினம் கர்நாடக முதல்- அமைச்சர் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறி இருக்கிறார். இது கர்நாடக அரசின் வீண் பிடிவாத போக்கையே எடுத்துக் காட்டுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது மட்டுமல்ல தமிழகத்தின் உரிமையை மீறுகின்ற செயலாகும்.

தமிழகத்திற்கு கர்நாடக அரசு தர வேண்டிய 192 டிஎம்சி தண்ணீரில் 65 சதவீதம் கபிணி அணையிலிருந்துதான் மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது. எனவே கபிணிக்கும் மேட்டூருக்கும் இடையே இந்த புதிய அணையை கட்டினால் மேட்டூர் அணை முற்றிலும் வறண்டு போகும், இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு தமிழகம் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும்.

ஏற்கனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை தர மறுத்து வருவதால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல இன்னல்களுக்கு உட்பட்டு வரும் சூழலில், கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மதிக்காமல், தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடக அரசின் அணைகட்டும் முயற்சிக்கு மத்திய அரசு ஒரு போதும் அனுமதி அளிக்கக் கூடாது.

தமிழக அரசும் கர்நாடக அரசை கண்டிப்பதோடு, தமிழகத்தின் உரிமையை, நியாயத்தை நிலைநாட்டிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News