செய்திகள்

தமிழிசை சவுந்தர்ராஜன் மீது விடுதலை சிறுத்தைகள் போலீசில் புகார்

Published On 2017-10-24 10:18 GMT   |   Update On 2017-10-24 10:18 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சனம் செய்த தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது அக்கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர்.
சேதராப்பட்டு:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது விமர்சனம் செய்திருந்தார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

மேலும் தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரியும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருச் சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒன்றிய செயலாளர் கலைமாறன் தலைமையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு தமிழிசை சவுந்தர் ராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மனுவை ஏற்றுக்கொண்டு புகாரை பதிவு செய்தார்.

விடுதலை சிறுத்தை கட்சியினரின் இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News