செய்திகள்

டெங்கு கொசு உற்பத்தி: தனியார் மோட்டார் நிறுவன உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

Published On 2017-10-24 12:32 GMT   |   Update On 2017-10-24 12:33 GMT
விழுப்புரத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் மோட்டார் நிறுவன உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தலைமையிலான அதிகாரிகள் விழுப்புரம் நகர் பகுதியில் நேற்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். சென்னை சாலையில் உள்ள ஒரு தனியார் மோட்டார் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த வாகன டயர்களில் தேங்கி இருந்த நீரில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த தனியார் மோட்டார் நிறுவன உரிமையாளருக்கு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். தொடர்ந்து விழுப்புரம் வி.ஆர்.பி. தெரு, சண்முகபுர தெரு, மாதா கோவில் பஸ் நிறுத்தம், பாண்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சுகாதாரமின்றி வீடுகளை வைத்திருந்த 50 பேருக்கும் மற்றும் 100 கடைகளின் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உள்பட பலர் உடனிருந்தனர்.

Similar News