செய்திகள்

தேர்தல் முடிவு தெரிவதற்குள் அவசரப்பட்டு வாழ்த்திய அரசியல் தலைவர்கள்

Published On 2018-05-16 05:58 GMT   |   Update On 2018-05-16 05:58 GMT
கர்நாடக தேர்தல் முடிவுகளில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்திலேயே அரசியல் தலைவர்கள் சிலர் பா.ஜனதாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.#KarnatakaElection2018
எப்போதுமே பொறுமை வேண்டும். முந்திரிக்கொட்டை மாதிரி முந்தக்கூடாது என்பதற்கு கர்நாடக மாநில தேர்தல் முடிவுகளே மிகச்சிறந்த உதாரணமாகும்.

காவிரி நதிநீர் விவகாரம் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் கர்நாடகா சட்டப் பேரவை தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரியனை ஏறுவதற்கு காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அக்கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினார். அதே நேரத்தில் “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற கோ‌ஷத்துடன் களம் இறங்கிய பாரதிய ஜனதா கட்சி கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற துடியாய் துடித்தது.

பா.ஜனதாவின் இந்த எண்ணம் எளிதாக ஈடேறிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நேற்று காலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் 121 தொகுதிகளையும் தாண்டி பா.ஜனதா முன்னிலையில் இருந்தது. காலையில் இருந்த இந்த ஏற்றம் மாலையில் இறங்கு முகமாக மாறியது. 104 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவால் அரிதி பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை கைப்பற்ற முடியாமல் போய் விட்டது.

ஆனால் தேர்தல் முடிவுகளில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்திலேயே அரசியல் தலைவர்கள் சிலர் பா.ஜனதா எளிதாக ஆட்சியை பிடித்து விடும் என்று எண்ணி முன்கூட்டியே வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் போது, கர்நாடகத்தில் ஆட்சி பொறுப்பில் அமர உள்ள எடியூரப்பாவுக்கு வாழ்த்துக்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீரை திறக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பா.ஜனதா வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்தியையே அனுப்பி விட்டார். அதில் கர்நாடக தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததுடன் சுறுசுறுப்பான, மனசாட்சியோடு நேர்மையான உழைப்பால் பெற்ற இந்த வெற்றி உங்களின் புகழ் வெற்றிக்கு மேலும் ஒரு மணிமகுடம் என்றும் கூறியிருந்தார்.



கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா பெற்ற வெற்றியை தமிழக பா.ஜனதா கட்சியினரும் கொண்டாடினர். அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பா.ஜனதா கட்சியினரின் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மாலையில் தொய்வு ஏற்பட்டது. பெரும்பான்மை கிடைக்காததால் பா.ஜனதா கட்சியினர் விரக்தியில் மூழ்கியுள்ளனர். #KarnatakaElection2018
Tags:    

Similar News