செய்திகள்
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் - மாநகராட்சி ஊழியர் அடித்துக்கொலை
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சென்னை மாநகராட்சி மயான ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
பெரம்பூர்:
சென்னை மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 45). இவர், சென்னை மாநகராட்சி ராயபுரம் 5-வது மண்டலத்திற்கு உட்பட்ட மூலக்கொத்தளம் மாநகராட்சி சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் மயான ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்துவேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு ஜெகன், தனது 2 மகன்களுடன் செங்குன்றத்தை அடுத்த அலமாதி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
ஜெகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. தனது உறவினர்கள் உள்பட பலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்தனர்.
இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரைச் சேர்ந்த சசி, சூர்யா, வடிவேலு, சித்ரா மற்றும் மேலும் 3 பேர் என 7 பேரும் சேர்ந்து அலமாதியில் தனது தாய் வீட்டில் இருந்த ஜெகனை ஆட்டோவில் கடத்தி வந்து வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து கொடுத்த கடனை திரும்ப கேட்டு அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதில் ஜெகன் அடி தாங்க முடியாமல் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கொலையான ஜெகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து சசி, சூர்யா, வடிவேலு, சித்ரா ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.