செய்திகள்
சேதமடைந்த மறையூர் சாலை மேம்படுத்தப்படுமா?
மலைப்பகுதியிலிருந்து உருவாகும் சிற்றாறுகள் சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்கின்றன.
உடுமலை:
உடுமலையில் இருந்து சின்னாறு வழியாக கேரளா மாநிலம் மறையூர், மூணாறுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் வழியாக சாலை செல்கிறது.மாநில எல்லை வரையிலான 28.80 கி.மீ., சாலை நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் மாவட்ட முக்கிய சாலைகள் பிரிவின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலையில் மலைப்பகுதியிலிருந்து உருவாகும் சிற்றாறுகள் சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்கின்றன. அந்த இடங்களில் சாலை அடிக்கடி சேதமடைகிறது. மேலும் சின்னாறுக்கு முன்பாக அமைந்துள்ள அபாய வளைவு பகுதியிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.மேடான பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் விலக முடியாத அளவுக்கு அமைந்துள்ள வளைவில் விபத்துகள் ஏற்பட்டால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விடும்.
இந்த வளைவு பகுதியை மேம்படுத்தி மலைச்சரிவை ஒட்டி தடுப்புச்சுவர் கட்டி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். இந்த மேம்பாட்டுப்பணிகளை மேற்கொண்டால் உடுமலையிலிருந்து மறையூருக்கு காய்கறி எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கும், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக மறையூரிலிருந்து உடுமலைக்கு வந்து செல்லும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையின் சிறப்புத்திட்டங்கள் வாயிலாக நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.