செய்திகள்
கோப்புபடம்

அறுவடை நேரத்தில் பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள்-மலைவாழ் மக்கள் கவலை

Published On 2021-08-08 14:03 IST   |   Update On 2021-08-08 14:03:00 IST
விலை நிலங்களை ஆக்கிரமித்து வரும் பார்த்தீனியம் செடிகள் மற்றும் சீமை கருவேல மரங்கள் சாகுபடி பணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
உடுமலை:

உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் உள்ள பொறுப்பாறு, கோடந்தூர், ஆட்டு மலை ,ஈசல் தட்டு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், மாவடைப்பு, குளிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, கருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் உள்ளவர்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து பொறுப்பாறு மலைவாழ் விவசாயிகள் கூறுகையில்:-

இயற்கை முறையில் விவசாயம் செய்வதை தலையாய கடமையாக கொண்டு உள்ளோம். அதற்கு பருவமழை கை கொடுத்து உதவினால் மட்டுமே சாத்தியமாகும். 

ஆறுகளில் நீர் வரத்து ஏற்பட்ட பின்பு குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து சாகுபடி பணிகளை தொடங்குகிறோம். பருவ மழை அதிகமாக பெய்தால் அல்லது குறைந்து விட்டாலோ பயிர்கள் சேதம் அடைந்து விடுவதால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 

அத்துடன் விலை நிலங்களை ஆக்கிரமித்து வரும் பார்த்தீனியம் செடிகள் மற்றும் சீமை கருவேல மரங்கள் சாகுபடி பணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. பாசன நீரை கொண்டு வருவதற்கு அமைக்கப்பட்ட குழாய்களை யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தி விடுகிறது. 

இதனால் தண்ணீரை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்வதற்காக சாகுபடி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். தற்போது தக்காளி சாகுபடி செய்துள்ளோம். அதற்கு தெளிப்பு நீர் பாசனம் மூலமாக தண்ணீர் பாய்ச்சுவதுடன் முறையான பராமரிப்புக்களை மேற்கொண்டு வருகிறோம். 

இதனால் செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. ஆனால் அறுவடை நெருங்கும் சூழலில் வனவிலங்குகள் அதை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. எனவே வனப்பகுதியில் விவசாய தொழிலை ஊக்குவிப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும். 

இயற்கை பேரிடர்கள், பருவநிலை மாறுதல், வனவிலங்குகள் மூலமாக ஏற்படுகின்ற இழப்பீடுகளை ஈடு கட்டுவதற்கு உதவிகள் செய்ய வேண்டும்.  அப்படி செய்தால் விவசாய தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்றனர்.

Similar News