செய்திகள்
ஹெராயின்

ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயினை கடத்திய சென்னை பெண்ணுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா?

Published On 2021-09-22 14:39 IST   |   Update On 2021-09-22 16:00:00 IST
சென்னை தம்பதியினரின் போதை பொருள் கடத்தலுக்கு மேலும் பலர் உடந்தையாக இருந்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு நாட்டின் எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன.

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், போதை பொருட்கள் கடத்தலை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதை பொருட்கள் கண்டெய்னரில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து டெல்லியில் இருந்து அதிகாரிகள் விரைந்து சென்று முந்த்ரா துறைமுகத்தில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

முகத்துக்கு போடும் பவுடர் என்று கூறி இந்த போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. 40 டன் கொள்ளளவு கொண்ட 2 கண்டெய்னர்களிலும் முகத்துக்கு போடும் பவுடர்களுக்கு மத்தியில் ஹெராயின்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போதை பொருட்களை ஆந்திர மாநில நிறுவனம் ஒன்று முகப்பவுடர் என்று கூறி கடத்தி வந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

முந்த்ரா துறைமுகத்தில் அடிக்கடி போதைப் பொருட்கள் பிடிபட்டு வந்த போதிலும் இவ்வளவு அதிகமான அளவுக்கு இதுவரை பிடிபட்டது இல்லை. இதனால் ரூ.21 ஆயிரம் கோடி போதை பொருட்களை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து டெல்லியில் இருந்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ஆந்திராவுக்கு விரைந்து சென்று விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குறிப்பிட்ட இந்த நிறுவனத்தை சென்னையைச் சேர்ந்த தம்பதி நடத்தி வரும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

அவர்கள் ஆந்திராவில் வீடு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்தது.

வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்காக சென்றபோது அந்த தம்பதி சென்னைக்கு சென்று விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சென்னை அருகே உள்ள கொளப்பாக்கத்தில் வசித்து வருவது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் பின்னணி பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் தம்பதியினர் பெயர் மச்சாவரம் சுதாகர் மற்றும் பூரணவைசாலி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை கொளப்பாக்கத்துக்கு வந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மச்சாவரம் சுதாகர், பூரணவைசாலி இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். இருவரும் குஜராத்தில் உள்ள புஜ்ஜில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ஹெராயின் போதை பொருள் புழக்கத்திற்கு இதற்கு முன்பு இருந்த அரசு தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் மூலமாகவே ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் குஜராத்துக்கு கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து கைதான தம்பதிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.



குஜராத்தில் பிடிபட்டுள்ள போதை பொருட்கள் அதிக மதிப்பு கொண்டவை. இந்த போதை பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை தீவிரவாத குழுக்களுக்கு வழங்க சதி திட்டம் தீட்டப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து போதை பொருள் கடத்தல் பின்னணி பற்றி முழு அளவில் விசாரணை நடத்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் மற்ற மாநிலங்களிலும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சென்னை தம்பதியினரின் போதை பொருள் கடத்தலுக்கு மேலும் பலர் உடந்தையாக இருந்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சிலரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதன் மூலம் போதை பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Similar News