உள்ளூர் செய்திகள்
மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு: காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுவையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதை என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணிஅரசு கண்டு கொள்ளாமல் இருப் பதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
நீட் தேர்வில் வெற்றி பெற்றும் ஒதுக்கீடு இல்லாததால் புதுவை அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு கானல் நீராகியுள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது.
அப்போதைய கவர்னர் கிரண்பேடி இந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பினார். முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி, மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து அனுமதி கோரியும் பா.ஜனதா அரசு வேண்டுமென்றே காலம் கடத்தி நிராகரித்தது.
இப்போது என்.ஆர்.காங் கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் பெறும் எண்ணம் இல்லாமல் இருப்பது சரியல்ல.
மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் சமூக பார்வை நல்ல அரசுக்கு இருக்கவேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 2 ஆண்டாக உள் ஒதுக்கீடு பெற்று, சுமார் 300 பேர் பயனடைந்துள்ளனர்.
புதுவையிலும் இட ஒதுக்கீடு வழங்கினால் சுமார் 40 மாணவர்கள் மருத்துவக்கல்வி பெற்று பயனடைவர்.
புதுவை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலம் கடத்தாமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு அளித்திட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.