உள்ளூர் செய்திகள்
குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
திருச்சியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ளது கீழகல்கண்டார்கோட்டை பகுதி. இங்கு அக்ரஹாரம் உள்ளிட்ட இடங்களில் குரங்குகள் அதிக எண்ணிக்கையில் சுற்றி வருகின்றன.
தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீதிகளில் திரியும் குரங்குகள் திடீரென்று சிறுவர்கள், குழந்தைகள் மீது பாய்ந்து விடுகிறது. அவர்கள் கைகளில் வைத்திருக்கும் உணவு பொருட்களை பறித்து சென்றுவிடுகிறது.
வீடுகளின் மாடிகள், அருகிலுள்ள மரங்களில் தஞ்சம் அடைந்துள்ள 20&க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டின் கதவுகள் சிறிது திறந்திருந்தாலோ, ஜன்னல்கள் வழியாகவோ உள்ளே புகுந்துவிடுகிறது.
வீட்டை ரெண்டாக்கி வருவதோடு, அங்கிருக்கும் பொருட்களை வீணாக சிதறடித்து விட்டு செல்கிறது. இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் வீதிகளில் நடமாட அச்சம் தெரிவித்து வந்தனர்.
உடனடியாக பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடித்து காட்டிற்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று வனத்துறையினரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதற்கு கைமேல் பலனாக வனத்துறையினர் அக்ரஹாரம் பகுதியில் கூண்டு ஒன்றை வைத்து முகாமிட்டு காத்திருந்தனர். இந்த கூண்டுக்குள் ஒன்றன்பின் ஒன்றாக பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கிக்கொண்டன.
இதையடுத்து அந்த குரங்குகளை வனத்துறையினர் திருச்சி மாவட்டம் புலிவலம் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.