உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா மாத்திரை கொடுப்பதாக கூறி கொள்ளையடித்த 2 பேர் கைது

Published On 2022-01-30 07:28 GMT   |   Update On 2022-01-30 07:28 GMT
சோலையம்மாள் மூலனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் மூலனூர் எம்.குமாரபாளையத்தை சேர்ந்தவர் சோலையம்மாள் (வயது 80). இவர் கடந்த 20-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு மயிலாடும்பாறைக்கு சென்றார்.

பின்னர் வீடு திரும்பிய போது  வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும்  வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சோலையம்மாள் மூலனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது காங்கயம் செந்தாளம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் (38), மோகன்ராஜ் (22) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 8 பவுன் நகை, பித்தளை பாத்திரங்கள், திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கொரோனாவுக்கு மாத்திரை கொடுப்பதாக கூறி, வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News