உள்ளூர் செய்திகள்
உடுமலை கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்ற காட்சி.

திருப்பூர் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு

Published On 2022-01-30 08:11 GMT   |   Update On 2022-01-30 08:11 GMT
ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் நேற்று சிவாலயங்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
திருப்பூர்:

சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்கள் மிக சிறப்பு வாய்ந்தவை என்பதால் நேற்று மகாபிரதோஷ வழிபாடு திருப்பூர் கோவில்களில் விமரிசையாக நடந்தது. ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் நேற்று சிவாலயங்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில்  நேற்று மாலை அபிஷேக பூஜைகள் நடந்தன. நந்தியம்பெருமான், மூலவர், உமாமகேஸ்வரர் உற்சவமூர்த்திகளுக்கு, 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.பட்டாடை, வில்வமாலைகள் அணிவித்து, சிறப்பு அலங்காரபூஜைகள் நடந்தன. சிவனடியார்களும், ஓதுவா மூர்த்திகளும், தேவாரம், திருவாசக பாடல்கள் மற்றும் சிவபுராணம், திருத்தொண்டர் புராணம் பாடி, வேண்டுதல் செய்தனர்.

இதேபோல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருநாதசுவாமி கோவில், நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், பழங்கரை பொன்சோழீஸ்வரர் கோவில், வெள்ளகோவில் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில், சோளீஸ்வரர் கோவில், உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவில்  உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும்  சனி மகாபிரதோஷ வழிபாடு நடந்தது.

Similar News