உள்ளூர் செய்திகள்
ஈரோடு வ.உ.சி.பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது
ஈரோடு வ.உ.சி.பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகமானதால் விலை குறைந்தது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி.பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகமானதால் விலை குறைந்தது.
கொரோனா பரவல் காரணமாக ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள். 50-க்கும் மேற்பட்ட பழகடைகள் உள்ளன.
இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், பகலில் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. தாளவாடி, ஆசனூர், திண்டுக்கல், கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரத்தாகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காய்கறிகள் வரத்து குறைவாக இருந்ததால் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
கடந்த சில நாட்களாக காய்கறிகள் வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் காய்கறிகள் விலை குறைந்து உள்ளது. குறிப்பாக கடந்த வாரம் பீட்ரூட் கிலோ ரூ.80-க்கு விற்று வந்தது. ஆனால் இன்று மேலும் விலை குறைந்து கிலோவுக்கு ரூ.50 விற்பனை செய்யப்பட்டது.
கருப்பு அவரை கடந்த சில நாட்களாக கிலோவுக்கு ரூ.100 வரை விற்பனையாகி வந்தது.தற்போது விலை குறைந்து கிலோவுக்கு ரூ.65 விற்பனை ஆனது. இதேப்போல் முள்ளங்கி, சுரைக்காய், காளிப்ளவர், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகள் விலை கிலோ 5 முதல் 10 வரை குறைந்துள்ளது.
இன்று வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் காய்கறியின் விலை கிலோவில் வருமாறு:-
கத்திரிக்காய்-70, கேரட்-50, பீன்ஸ்-40, முட்டைகோஸ்-60, பச்சை மிளகா-65, பட்ட அவரை-50 முதல் 60வரை, இஞ்சி-40, உருளைக்கிழங்கு-30, சேனைக்கிழங்கு-25, சுரைக்காய்-15, பீர்க்கங்காய்-30, முள்ளங்கி-20, பாவைக் காய்-40, முருங்கைக்காய் ஒரு கட்டு-200, சின்ன வெங்காயம்-50, பெரிய வெங்காயம்-40, தக்காளி-10 முதல் 17 வரை விற்பனையானது.
கொரோனா காரணமாக கடந்த 3 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தாக்கம் குறைய தொடங்கி உள்ளதால் இன்று முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதலே வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.