உள்ளூர் செய்திகள்
சேதமடைந்த நிலையில் உள்ள கிளை நூலகத்தை படத்தில் காணலாம்

இடிந்து விழும் நிலையில் உள்ள நூலகம்

Published On 2022-01-31 14:03 IST   |   Update On 2022-01-31 14:03:00 IST
போடியில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிளை நூலகத்தை சீரமைக்க வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலமலை ஊராட்சியில் அரசு பொது நூலக கிளை உள்ளது. சுமார் 1150க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், தினசரி 50க்கும் மேற்பட்ட வாசகர்களும் இந்த நூலகத்தால் பயன் பெற்று வருகின்றனர்.  

சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பல்சுவை நாவல்கள், சிறுகதை நாவல்கள், அறிவியல், வரலாற்று புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளது.

இந்த கிராமத்தில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் இந்த நூலகத்தின் மூலம்பெரிதும் பயன் பெற்று வருகின்றனர். தற்போது இந்த நூலகம் முறையான பராமரிப்பு  இன்றி காங்கிரீட் மேற்கூரை மிகவும் சிதிலமடைந்து  இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மின்சார இணைப்புகள் நீர் புகுந்து துருப்பிடித்த நிலையில் உள்ளதால் மின் கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

மேலும் இதன் சுற்றுப் பகுதிகள் சமூக விரோதிகளின் புகலிடமாகவும், கழிப்பிடமாகவும் மாறிவருகிறது. இதற்கான முறையான பாதை வசதி இன்றி மக்கள் அருகில் உள்ள தெருக்களில் உள்ள சந்து வழியாக சுற்றி வரும் அவல நிலை உள்ளது. முறையான பாதை வசதி எதுவும் இன்றி புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்களும் உலவுகிறது.

எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு நூலகத்தையும் அதன் சுற்று பகுதிகளையும் சரிசெய்து முறையான பாதைவசதி ஏற்படுத்தி தரும்படியும் இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News