உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

தரமற்ற விதைகளால் முருங்கை சாகுபடியில் அதிக நஷ்டம் விவசாயிகள் வேதனை

Published On 2022-02-27 07:58 GMT   |   Update On 2022-02-27 07:58 GMT
செடி முருங்கைக்கு உரிய எவ்வித தன்மையும் இல்லாமல் மரம் போல வளர்ந்து காய்ப்புத்திறனும் இல்லாததால் சாகுபடிக்கு செலவிட்ட பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
உடுமலை;

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது. தாராபுரம், மூலனூர் பகுதியில் பிரதானமாக உள்ள செடி முருங்கை சாகுபடி மேற்கொள்ள தற்பேது உடுமலை பகுதி விவசாயிகளும் ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் பல்வேறு காரணங்களால் இச்சாகுபடியில் நஷ்டம் ஏற்படுவதாகவும்  குறிப்பாக தரமற்ற விதையே, முக்கிய பிரச்சினையாக உள்ளது என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து குடிமங்கலம் வட்டார விவசாயிகள், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், 

கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம் பகுதியில் கடந்தாண்டு, செப்டம்பர் 2021ல்  கோவை வேளாண் பல்கலையின் பி.கே.எம்., 1 ரக செடி முருங்கை விதைகளை வாங்கி நடவு செய்தோம். 5 மாத பராமரிப்புக்குப்பிறகு செடி முருங்கையில், பூ விடாமல், அதிக உயரத்துக்கு வளர்ச்சி மட்டுமே உள்ளது.

பல முறை கவாத்து செய்தும் காய் பிடிக்கவில்லை. குறைந்த அளவு பிடித்த பிஞ்சுகளும் உதிர்ந்து விட்டன. செடி முருங்கைக்கு உரிய எவ்வித தன்மையும் இல்லாமல் மரம் போல வளர்ந்து காய்ப்புத்திறனும் இல்லாததால் சாகுபடிக்கு செலவிட்ட பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்துறை சார்ந்த எந்த துறையினரும் ஆய்வு செய்யவில்லை, தரமற்ற விதைகளால் இப்பகுதியில் தொடர் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. 

அரசு உடனடியாக இப்பிரச்சினை குறித்து சிறப்பு நிபுணர்கள் குழு வாயிலாக, நேரடி ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். 

தரமற்ற விதை உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News