உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மாதிரவேளூரில் மணல் குவாரி திறப்பு

Published On 2022-02-27 14:49 IST   |   Update On 2022-02-27 14:49:00 IST
மாதிரவேளூரில் மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளதை கட்டுமான தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசின் சார்பில் மணல் குவாரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு பூஜைகள் செய்யப்பட்டு குவாரி தொடங்கியது. 

குவாரி முழுமையாக செயல்படுவதற்கான அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது.

மணல் குவாரியிலிருந்து மணல் அள்ளுவதற்கு ஏதுவாக 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் குவியல் குவிக்கும் பணி, ஆற்றில் எளிதாக கனரக லாரிகள் சென்று மணல் ஏற்றிக்கொண்டு வந்துசெல்லும் வகையில் தற்காலிக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

மாதிர வேளூரில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் பணி தீவிரமாக ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், குவாரியிலிருந்து தினந்தோறும் எடுத்துச்செல்லப்படும் மணல் சேகரிப்பதற்காக அருகில் உள்ள குன்னம் கிராமத்தில் அரசு விதிமுறைப்படி மணல் கிடங்கு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடம் மேம்படுத்தும் பணியும் தீவிரமடைந்து வருகிறது.

பல வருடங்களுக்கு பிறகு கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரி திறக்கப்படுவதால் கட்டுமான தொழிலாளர்கள், பொறியாளர்கள், கட்டுமான தொழிலை சார்ந்துள்ள பலஆயிரம் குடும்பத்தினர் வாழ்வு மேம்படும் என்பதால் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மணல் தட்டுப்பாடு, கொரோனா தொற்று பரவல் போன்ற காரணங்களால் கடந்த சில வருடங்களாக கட்டுமான தொழில் மிகவும் நலிவடைந்திருந்த நிலையில் அரசின் இந்த முடிவு கட்டுமான தொழிலை சார்ந்துள்ள பலஆயிரம் குடும்பத்தினரின் வாழ்வு மேம்பட வழி பிறந்துள்ளதாக கட்டுமான தொழிலாளர்கள் கூறுகின்றனர். 

அரசு நிர்ணயித்த விலையில் மணல் விற்பனை செய்யப்படுவதை உறுதிசெய்து கண்காணிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News