உள்ளூர் செய்திகள்
பட்டாசு விபத்தில் தீக்காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மண்குண்டாம்பட்டியில் சண்முகையா என்பவர் ரோல் கேப் தயாரிக்கும் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். திருத்தங்கல் அருகே உள்ள ஆலமரத்து பட்டியை சேர்ந்த வைரமுத்து மகன் வைகுண்ட ராஜா (36) என்ற தொழிலாளி நேற்று பட்டாசு ஆலையின் தனியறையில் பாம்பு மாத்திரை உற்பத்திக்கு மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய வைகுண்ட ராஜாவை சக தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வைகுண்டராஜா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வெம்பகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த வைகுண்டராஜாவுக்கு தனலட்சுமி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.