உள்ளூர் செய்திகள்
கோவில் திருவிழா தொடர்பான அமைதி கூட்டத்தில் சமரசம் ஏற்படாததால் தேவிகாபுரத்தில் தொடர்ந்து பதட்டம் - போலீஸ் குவிப்பு
கோவில் திருவிழா தொடர்பான அமைதி கூட்டத்தில் சமரசம் ஏற்படாததால் தேவிகாபுரத்தில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ளது தேவிகாபுரம் தேவிகாபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி உத்திர பெருவிழா 14 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதை ஊர் பொதுமக்கள் ஒரு பிரிவினர் நடத்தி வந்தனர். இந்த ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் மற்றொரு பிரிவினர் எங்களுக்கும் ஒரு நாள் ஒதுக்கீடு செய்து திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர்.இதற்கு வழக்கமாக திருவிழா நடத்தும் ஒரு பிரிவினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
இதையடுத்து சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி லட்சுமி தலைமை தாங்கினார்.
செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ், போளூர் டி.எஸ்.பி. குணசேகரன், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், செய்யாறு சிப்காட் தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் முரளி மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா விழா குழு பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள் இதற்கு முன்பு திருவிழா நடத்திய ஒரு பிரிவினர் உள்பட கலந்து கொண்டனர்.
இதில் திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி கூறுகையில்:-
புதிதாக விழா நடத்த அனுமதி கேட்டு உள்ள ஒரு பிரிவினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தீர்ப்பு நாளை வர உள்ளது. அதன் பிறகு திருவிழா நடத்துங்கள். மேலும் எங்களது உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு சொல்வதாக கூறினார்.
இதை ஏற்றுக்கொள்ளாத இதற்கு முன்பு திருவிழா நடத்திய ஒரு பிரிவினர் மற்றும் விழாக்குழு பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.