உள்ளூர் செய்திகள்
உக்ரைன் போரை நிறுத்த பார்வையற்றோர் கூட்டு வழிபாடு
உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த வலியுறுத்தி திருச்சியில் பார்வையற்றோர் கூட்டு வழிபாடு மற்றும் பிரார்த்தனை செய்தனர்.
திருச்சி:
திருச்சியில் செயல்பட்டு வரும் லூப்ரா பார்வையற்றோர், ஊனமுற்றோர் சேவை மையம் சார்பில் பார்வையற்றவர்களுக்கும், முதியோர்களுக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பல்வேறு சமூக சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்&ரஷ்யா இடையேயான போரை உடனடியாக நிறுத்த வேண்டியும், போரில் இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடையவும் கூட்டு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
இந்த கூட்டு வழிபாட்டில் திருச்சி நாகமங்கலத்தில் வாழும் பார்வையற்றோர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் நடத்தப்படும் மாலை நேர இலவச கல்வி வகுப்பில் படிக்கும் புதுத்தெரு, பட்டத்தம்மாள் தெரு, சித்திரப்பட்டி, அரியாவூர், மாத்தூர் ஆகிய இடங்களில் பயிலும் 200 குழந்தைகளும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் லூப்ரா பார்வையற்றோர் சேவை மைய நிர்வாக இயக்குனர் பி.தாமஸ், புவனேஸ்வரி குணசேகரன், சித்ரா புவனேஸ்வரன், கணேசன், ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையற்றோர் எளிதில் தெரிந்து கொள்ளும், பேசும் கைக்கடிகாரம், அரிசி மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.
மேலும் உக்ரைன்&ரஷ்யா போரை நிறுத்தவும், அங்கு வாழும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று லூப்ரா பார்வையற்றோர் சேவை மைய நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.