உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் சோதனை
பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் நிலையில் மாணவர்களின் படித்தல் திறன் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது.
உடுமலை:
கொரோனா ஊரடங்கின்போது பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. இரு ஆண்டுகளாக அரசின் ‘ஆல்பாஸ்’ அறிவிப்பால் அடுத்தடுத்த நிலைக்கு மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதனால் மாணவர்களிடையே கற்றல் இழப்பும் ஏற்பட்டது.
இதனை ஈடுகட்டும் வகையில் உடுமலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக மாணவர்களின் படித்தல் திறனை மேம்படுத்தப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் நசன் மேற்பார்வையில் 30 நாட்களில் தமிழ் படித்தல் ‘கையேடு’, ’ரீட் தமிழ் ஆப்’ ஆகியவை வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் நிலையில் மாணவர்களின் படித்தல் திறன் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தலைமையில், திருமூர்த்திமலை அரசு உண்டு உறைவிடப்பள்ளி, திருமூர்த்தி நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்தல் திறன் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து படித்தல் திறனை மேம்படுத்தும் கையேடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. விரிவுரையாளர்கள் சரவணகுமார், பாபிஇந்திரா, சுப்பிரமணி, நூலகர் ராமகிருஷ்ணன், புள்ளியியல் அலுவலர் லிங்கசாமி ஆகியோர் உடனிருந்தனர்.