உள்ளூர் செய்திகள்
11ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
காரியாபட்டியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய பெண் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தை சேர்ந்த சூர்யா (22) என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர்.
சம்பவத்தன்று இரவு அங்குள்ள முனியாண்டி கோவில் அருகே சூர்யா மாணவியை வரவழைத்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை சூர்யா பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அவர் மாணவியை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி தனது நேர்ந்த கொடுமை குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.