உள்ளூர் செய்திகள்
வழக்கறிஞர் மோகன், யுவராஜ்

யுவராஜுக்கு எந்த பிணையும் கிடைக்காதவாறு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது - அரசு தரப்பு வழக்கறிஞர் பேட்டி

Published On 2022-03-08 17:06 IST   |   Update On 2022-03-08 17:06:00 IST
நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் தீர்ப்பு கிடைத்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மதுரை:

சேலம் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், மற்றொரு முக்கிய குற்றவாளியான அருண் என்பவருக்கும் 3 ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும் மற்றொரு குற்றவாளியான சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல் தண்டனையும் மற்றும் தலா ரூ.5ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

தீர்ப்புக்கு முன்னதாக நடைபெற்ற விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் வாதாடுகையில், குற்றவாளிகள் 10 பேரும் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளது சாட்சியங்கள், ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டுள்ளது. எனவே கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

இந்த வழக்கில் கோகுல்ராஜ் திட்டமிடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். முதலில் தற்கொலை வழக்காக கருதப்பட்ட நிலையில், உடற்கூராய்வுக்கு பின்பே கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் தீர்ப்பு கிடைத்துள்ளது. முதல் குற்றவாளி யுவராஜுக்கு எந்த பிணையும் கிடைக்காதவாறு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News