உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை

Published On 2022-04-07 12:35 IST   |   Update On 2022-04-07 12:35:00 IST
தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை - விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக்-கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு முறை ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட மாணவ- மாணவியர் ஒற்றை சாளர முறையில் தொழிற்கல்வி படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டவராய் இருக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றவர்கள் நிதியுதவி பெற தகுதியானவர்கள் அல்ல. 

தமிழ்நாட்டினை வசிப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். கல்வி உதவி பெறும் விவசாயிகளின் மகன்கள் மற்றும் மகள்கள், கல்வி உதவி பெறும் இறந்த அரசு பணியாளர்களின் மகன்கள் மற்றும் மகள்கள், கல்வி உதவி பெறும் பணியிலிருக்கும் ராணுவ வீரர்களின் மகன்கள் மற்றும் மகள்கள், கல்வி உதவி பெறும் முன்னாள் ராணுவ வீரர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற இயலாது.

தகுதியான மாணவ-மாணவியர் உரிய ஆவணங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் அத்தாட்சி செய்யப்பட்ட நகலுடன் மாவட்ட ஆட்சித் தலைவர், கன்னியாகுமரி,  நாகர்கோவில் அல்லது தாங்கள் கல்வி பயிலும் கல்வி நிறுவன தலைவர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். 

அந்த வகையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதற்கான வசிப்பிடச் சான்று (வட்டாட்சியரிடம் பெறப்பட வேண்டும்), குடும்ப தலைவரின் ஆண்டு வருமானச்சான்று, குடும்ப உறுப்பினர்களின் வயது, கல்வித்தகுதி வருமான விவரங்கள் அடங்கிய விவரப்பட்டியல், ஒற்றை சாளர முறையில் சேர்க்கை பெற்றதற்கான உத்தரவு, இருப்பிடச்சான்று ஆகியவற்றின் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் அத்தாட்சி செய்யப்பட வேண்டும். 

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிதியுதவி வழங்கப்படும். தகுதியான மாணவ-மாணவியர் அரசின் இத்திட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Similar News