விபத்தில் சிக்கிய மினி லாரியில் 2700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- டிரைவர் கைது
- 45 கிலோ எடை கொண்ட 60 வெள்ளைநிற சாக்குமூட்டையில் இருந்தது
கோவை,
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் கோபிநாத், சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் போலீசார் கோவை குனியமுத்தூர் - பாலக்காடு ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அவ்வப்போது சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை நிறுத்தி வாகன சோதனையும் செய்துவந்தனர். அப்போது குனியமுத்தூர் - பாலக்காடு ரோட்டில் ஒரு மினி லாரி விபத்து ஏற்பட்ட நிற்பதாக இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மினி லாரியில் சுமார் 45 கிலோ எடை கொண்ட 60 வெள்ளைநிற சாக்குமூட்டையில் 2700 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
அதிகாரிகள் சோதனை செய்ததை கண்டதும் டிரைவர் தப்பிச்செல்ல முயற்சி செய்தார். இதனை பார்த்த அதிகாரிகள் டிரைவரை மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் டிரைவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜிஜோ ஜெபஸ்டின் என்பதும் முருகேச பாண்டியன் என்பவர் டிரைவர் வேலைக்கு தன்னை அழைத்து சென்று மினி லாரியில் அரிசியை ஏற்றி கேரளா சென்று நிறுத்தி வைக்கவும் கூறியதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் மினி லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜிஜோ ஜெபஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் மினி வேன் மற்றும் அரிசி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.