உள்ளூர் செய்திகள்

பெரும்பாக்கத்தில் ரூ.3.25 கோடியில் பூங்கா அமைக்கும் பணி- அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

Published On 2023-05-20 09:30 GMT   |   Update On 2023-05-20 09:30 GMT
  • சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம்.
  • அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24-ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை வேளச்சேரி, 100 அடி புற வழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாகவும், சோழிங்கநல்லூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும் அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றோடு 24 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம் மீதமுள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளிலுள்ள 10 திட்டங்களையும் இந்த மாத இறுதிக்குள் நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபடவிருக்கின்றோம்.

அந்த வகையில், அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று வேளச்சேரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாக கள ஆய்வு செய்திருக்கின்றோம். அதேபோல, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுகின்ற சிதிலமடைந்த பள்ளிக்கூடங்களை புதுப்பித்தல், பஸ் நிலையங்களை மேம்படுத்துதல், சலவைக் கூடங்களை மறுவளர்ச்சி மேம்படுத்துதல், காசிமேடு கடற்கரையோரம் 5 கிலோ மீட்டர் அளவிற்கு அந்த இடத்தை அழகுபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப் பட்டு, ஒட்டுமொத்தமான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இந்த அறிவிப்புளை முதலமைச்சர் சீரிய ஆலோசனையின் பேரில் வடிவமைத்த இந்தத் திட்டங்கள் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல், திட்டங்களைத் திருத்தி அமைத்து, மக்களுக்காகத் தான் திட்டங்கள் என்ற வகையிலே இந்த திட்டங்களைச் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த களஆய்வு நிச்சயம் ஒரு பயனுள்ளதாக அமையும். இந்த பகுதிகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அனைவருடைய உடல் நலத்தைப் பாதுகாக்கின்ற வகையிலும், அதே நேரத்தில் விளையாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலும், பெரும்பாக்கத்தில் விரைவில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் ஏற்படுத்தித் தரப்படும்.

மேற்கண்ட அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் , சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா , அடையார் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் துரைராஜ், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர் ருத்ர மூர்த்தி, முதன்மைத் திட்ட அமைப்பாளர் அனுசுயா , மாநகராட்சி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News