உள்ளூர் செய்திகள்

2 கிலோ மெத்தபெட்டமைனை ரூ.16 லட்சத்துக்கு விற்ற போலீஸ்காரர் கைது

Published On 2024-12-19 06:31 GMT   |   Update On 2024-12-19 06:31 GMT
  • போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் போலீசார்கள் மீதும் கடும் நடவடிக்கை.
  • போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராயபுரம்:

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை அடியோடு ஒழிப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் போதை பொருள் விற்றது தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய சமீர், ஆனந்த், ஜேம்ஸ் ஆகிய 3 போலீசார்களை கடந்த சிலநாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இதில் ஜேம்ஸ் என்பவர் தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றியவர் ஆவார்.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் போலீசார்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த அருண்பாண்டியன் என்ற போலீஸ்காரரும் நேற்று போதைப்பொருள் விற்ற வழக்கில் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் காரில் போதைப்பொருள் கடத்தி வந்தது தொடர்பாக பெரம்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம், அசாம் மாநிலத்தை சேர்ந்த பாத்திமா பேகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸ்காரர் அருண்பாண்டியன் தங்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப் பொருளை விற்றதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தான் அருண்பாண்பாண்டியன் சிக்கி உள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியானது.

அருண் பாண்டியன் வண்ணாரப்பேட்டை போலீஸ்நிலையத்தில் கோர்ட்டு வழக்குகள் தொடர்பான பணிகளை கவனித்து வந்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு பாலசுப்பிரமணியன் மீது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப் பொருள் வழக்கு உள்ளது. இதுதொடர்பாக பாலசுப்பிரமணியம் கோர்ட்டுக்கு வந்து சென்றபோதுதான் போலீஸ்காரர் அருண் பாண்டியனுடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மெத்தப்பட்டமைன் போதைப்பொருளை போலீஸ்காரர் அருண் பாண்டியன் அதிகாரிகளுக்கு தெரியாமல் பாலசுப்பிரமணியனுக்கு விற்றது தெரிந்தது.

இதுவரை சுமார் 2 கிலோ மெத்தப்பட்டமைனை விற்று ரூ.16 லட்சம் வரை பணம் பெற்று இருப்பது தெரியவந்தது.

இந்த போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சாய்தீன் அசாம், முசாபீர் ஆகிய மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News