அமித் ஷாவை கண்டித்து சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் செய்ய முயற்சி
- ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.
சேலம்:
மத்திய மந்திரி அமித் ஷா அம்பேத்கரை அவமதித்ததாக கூறி சேலம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தபோவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருந்தனர். இது பற்றி தெரியவந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் தலைமையில் ரெயில் மறியல் செய்ய ஊர்வலமாக வந்தனர்.
அப்போது அவர்கள் அமித் ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் ரெயில் மறியலுக்கு முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் நிலையத்திற்கு முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.