அரசு ஆஸ்பத்திரியில் கழிவறைகளில் தண்ணீர் வராததால் நோயாளிகள்- உறவினர்கள் தவிப்பு
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.
- 2-வது நாளாக இன்றும் ஆஸ்பத்திரி கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை.
சேலம்:
சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரி மல்டி ஸ்பெசா லிட்டி ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது. இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.
இதனால் 1000-த்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக தினமும் சிகிச்சை பெற்று செல்லும் நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாகவும் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரி எப்போதும் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் என மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காட்சி அளிக்கும்.
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மதியம் முதல் கழிவறைகள் மற்றும் கை, பாத்திரங்கள் கழுவும் இடங்களிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் நோயாளிகள் ஒவ்வொரு அறையாக தண்ணீருக்கு அலைந்தும் அங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் நேற்றிரவு முதல் கழிவறை செல்பவர்கள் கூட தண்ணீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டனர். இதனால் கழிவறை அருகில் செல்ல முடியாமல் துர் நாற்றம் வீசுகிறது.
2-வது நாளாக இன்றும் ஆஸ்பத்திரி கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை. இதனால் அங்கு தங்கியிரு க்கும் நோயாளிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும் நோயாளிகளின் உறவினர்கள் வெளியில் சென்று இயற்கை உபாதைகளை கழித்து வருகிறார்கள்
உள் நேயாளிகள் வெளியிலும் செல்ல முடியாமல், இயற்கை உபாதையும் கழிக்க முடியாமலும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலரது உறவினர்கள் வெளியில் சென்று பாத்திரங்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தினர். இதே போல சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிவறையிலும் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் வராததால் போலீசாரும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சீரான தண்ணீர் வழங்கி நோயாளிகளின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், தடையற்ற மின்சாரமும் வழங்க வேண்டும் என்பது அங்கு சிகிச்சை பெறுபவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.